ஹைதராபாத்: தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் மகேஷ் பாபுவுக்கு அமலாக்க இயக்குனரகம் சம்மன் அனுப்பியுள்ளது. ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் நிதி மோசடி தொடர்பான வழக்கில் வரும் 28-ம் தேதி ஐதராபாத்தில் உள்ள அமலாக்க இயக்குனரக அலுவலகத்தில் ஆஜராகுமாறு சம்மனில் கூறப்பட்டுள்ளது. நடிகர் மகேஷ் பாபு இரண்டு ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் புதிய திட்டங்களான சாய் சூர்யா மற்றும் சுரானாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
இதற்காக அவர் சுமார் ரூ.5.9 கோடி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காசோலையாக ரூ.3.4 கோடியும், ரொக்கமாக ரூ.2.5 கோடியும் பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பந்தப்பட்ட ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் இந்த பணத்தை மோசடி மூலம் பெற்றிருக்கலாம் என அமலாக்க இயக்குனரக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். எனவே தற்போது மகேஷ் பாபுவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சுரானா நிறுவனத்தின் நிர்வாகிகளில் ஒருவரான நரேந்திர சுரானா மற்றும் சாய் சூர்யா டெவலப்பர்ஸ் உரிமையாளர்களில் ஒருவரான சதீஷ் சந்திர குப்தா மற்றும் தெலுங்கானாவில் உள்ள பலர் மீது தாக்கல் செய்யப்பட்ட புகார்களின் அடிப்படையில் இந்த மோசடி வழக்கை அமலாக்க இயக்குனரகம் விசாரித்து வருகிறது.

இந்த நிறுவனங்கள், ஒரே மனையை பலரிடம் விற்று, போலி பதிவு உத்தரவாதம் அளித்து, முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு மனை வாங்க முன்வருபவர்களிடம் முன்பணம் பெற்று, பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இது தொடர்பாக மகேஷ் பாபுவின் நடவடிக்கைகள் மேலும் பலரை மோசடி வலையில் சிக்க வைத்துள்ளது. இந்த மோசடியை நிறைவேற்றுவதில் மகேஷ் பாபுவுக்கு தொடர்பில்லை என்றாலும், அதற்காக இந்த நிறுவனங்களிடம் பெற்ற பணம் மோசடி மூலம் பெறப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
‘ஆர்ஆர்ஆர்’ படத்திற்கு பிறகு ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் படம் தயாராகி வருகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் இல்லாமல் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இப்படத்தில் மகேஷ் பாபுவுடன் பிரியங்கா சோப்ரா, பிருத்விராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். படப்பிடிப்புக்காக விரைவில் வெளிநாடு செல்ல படக்குழு திட்டமிட்டுள்ளது. 2026-ல் படப்பிடிப்பு நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை 2027 கோடை விடுமுறையில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.