புதுடெல்லி: டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பதை தடுக்க தீபாவளி பண்டிகை அன்று பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் சமீபத்தில் கொண்டாடப்பட்ட தீபாவளி பண்டிகையின் போது டெல்லியில் தடையை மீறி பட்டாசுகள் வெடிக்கப்பட்டது.
இதனால், காற்று மாசு அபாய நிலையை எட்டியுள்ளது. இதுகுறித்து, சுப்ரீம் கோர்ட் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு நீதிபதிகள் அபய் ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:-
சுத்தமான காற்றை சுவாசிப்பது அடிப்படை மனித உரிமைகளில் ஒன்றாகும். காற்று மாசுபாட்டை எந்த மதமும் ஊக்குவிப்பதில்லை. தொடர்ந்து பட்டாசுகளை வெடித்தால் டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரிக்கும். பட்டாசு தடையை டெல்லி காவல்துறை சரியாக அமல்படுத்தவில்லை.
தீபாவளியன்று பட்டாசுகளை வெடிக்கக் கூடாது என்று டெல்லி அரசு கடந்த அக்டோபர் மாதம் கூறியது. 14-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. அப்போது டெல்லி போலீசார் பட்டாசு விற்பனையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பட்டாசு விற்பனையை முற்றிலுமாக நிறுத்தியிருக்க வேண்டும். பட்டாசு விற்பனையை தடுக்க தவறிய போலீஸ் அதிகாரிகள் மீது போலீஸ் கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பட்டாசு விற்பனை மற்றும் பட்டாசு வெடிப்பதை தடுக்க டெல்லி போலீஸ் கமிஷனர் தனிப்படை அமைக்க வேண்டும். பட்டாசு வெடிப்பதைத் தடுக்கும் வகையில் சிறப்புக் காவல் துறையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். டெல்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆண்டு முழுவதும் பட்டாசு வெடிக்க தடை விதித்து வரும் 25-ம் தேதிக்குள் டெல்லி அரசு முடிவெடுக்க வேண்டும். பட்டாசு தடையை அமல்படுத்துவது தொடர்பாக டெல்லி போலீஸ் கமிஷனர் வரும் 25-ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.
பட்டாசுக்கு தடை விதித்தது தொடர்பாக டெல்லியின் அண்டை மாநிலங்கள் வரும் 25-ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.