புதுடில்லி: “எந்த வேலையும் செய்யாதவர்களுக்கு இலவசம் வழங்க அரசுகளிடம் பணம் உள்ளது; நீதிபதிகளுக்கு சம்பளம், ஓய்வூதியம் வழங்குவதில் தான் பொருளாதார நெருக்கடி ஏற்படுவதாக கூறுகின்றனர்,” என, சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. நீதிபதிகளின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பாக அகில இந்திய நீதிபதிகள் சங்கம் 2015ல் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது.
நீதிபதி பி.ஆர்.கவை தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணை நடைபெற்றது. அப்போது, மத்திய அரசின் அட்வகேட் ஜெனரல் வெங்கட்ராமணி, ”நீதித்துறையின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய பலன்களை அரசு முடிவு செய்யும் போது, நிதி நெருக்கடியை கருத்தில் கொள்ள வேண்டும்,” என கூறியபோது, நீதிபதிகள் குறுக்கிட்டனர். “வேலை செய்ய முடியாத மக்களுக்கு இலவசங்களை வழங்க அரசுகளிடம் பணம் உள்ளது. குறிப்பாக, மகாராஷ்டிரா தேர்தலின் போது, பெண்களுக்கு நேரடி நிதியுதவி வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டது.
டில்லி சட்டசபை தேர்தலுக்கு, அரசியல் கட்சிகள் உறுதியளித்துள்ளன. இதற்கெல்லாம் உங்களிடம் மாதம் ரூ.2,500 வரை பணம் இருக்கிறது, ஆனால் நீதிபதிகளின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் பற்றி பேசும்போது, நீங்கள் நிதி நெருக்கடி பற்றி பேசுகிறீர்கள். இதைத்தொடர்ந்து பதில் அளித்த தலைமை வழக்கறிஞர், ‘‘இலவசம் வழங்கும் நடைமுறைகளை அறிவிக்கும் போது நிதிச்சுமையையும் அரசு கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த விவகாரத்தில் நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர், நீதித்துறை மேலும் சிறப்புடன் செயல்படுவதற்கு நீதிபதிகளுக்கு நல்ல ஊதியம் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும் என்பதை, தன் தரப்பு வாதமாக வைத்தார். விசாரணை இன்றும் தொடர்கிறது.