புதுடெல்லி: கிறிஸ்தவ தேவாலயத்தால் நடத்தப்படும் உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் கன்னியாஸ்திரிகள் மற்றும் பாதிரியார்களின் சம்பளத்திற்கு வருமான வரி விதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி ஏற்கனவே தீர்ப்பளித்திருந்தார். “சம்பளம் நேரடியாக மாவட்டத்திற்கு செல்வதால், டிடிஎஸ் பிடித்தம் செய்ய முடியாது” என்று தீர்ப்பில் கூறியிருந்தார்.
தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து வருமான வரித்துறை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு, கன்னியாஸ்திரிகள் மற்றும் பாதிரியார்களின் சம்பளம் வருமான வரி விலக்குக்கு உட்பட்டது என 2019-ல் தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து சர்ச் பள்ளி நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் அரவிந்த் தத்தார், ”அரசு சம்பளமாக வழங்கும் மானியம், மாவட்டத்திற்கு நேரடியாக செல்கிறதே தவிர, பள்ளிகளில் பணியாற்றும் கன்னியாஸ்திரிகள், பாதிரியார்களுக்கு வழங்குவதில்லை.
எனவே, அவர்களின் சம்பளத்தில் இருந்து டிடிஎஸ் கழிப்பதில் இருந்து அவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும்” என்று அவர் வாதிட்டார். ஆனால், இதை நீதிபதிகள் ஏற்க மறுத்துவிட்டனர். அவர்கள் தங்கள் உத்தரவில் கூறியிருப்பதாவது:- ஒருவர் சம்பளம் பெற்றால் அதற்கு வருமான வரி பிடித்தம் செய்ய வேண்டும். டிடிஎஸ் கழிப்பதில் இருந்து விலக்கு கோர முடியாது. சட்டம் அனைவருக்கும் பொதுவானது. அரசு மானிய தொகையை வழங்காது மறை மாவட்டத்திற்கு அரசு மானிய தொகையை வழங்காது.
பள்ளிகளில் ஆசிரியர்களாக பணிபுரியும் நபர்களுக்கு மட்டுமே தொகை வழங்கப்படுகிறது. அந்த சம்பளமும் கன்னியாஸ்திரிகள் மற்றும் பாதிரியார்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. அது அவர்களின் வருமானமாகவே கருத வேண்டும். எனவே, தேவாலயத்தால் நடத்தப்படும் உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களாகப் பணிபுரியும் கன்னியாஸ்திரிகள் மற்றும் பாதிரியார்களுக்கு வழங்கப்படும் சம்பளமும் வருமான வரிக்கு உட்பட்டது என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை உறுதிசெய்கிறோம்.
இதை கூறிய நீதிபதிகள், சர்ச் பள்ளி நிர்வாகங்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்தனர்.