டில்லி – நொய்டா விரைவு சாலையில் சுங்க கட்டணம் வசூலிப்பதற்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் 2016ல் விதித்த தடை உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இவ்வாறு சுங்க கட்டண வசூலை அதிகார துஷ்பிரயோகம் என கூறி, வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்த சாலை, டில்லி மற்றும் நொய்டா இடையே உள்ள 9.2 கிலோமீட்டர் தூரத்தை இணைக்கும் டி.என்.டி. எனப்படும் டில்லி-நொய்டா நேரடி விரைவு சாலை. 2001-ஆம் ஆண்டு, என்.டி.பி.சி.எல். (நொய்டா டோல் பிரிட்ஜ்) என்ற தனியார் நிறுவனம் இந்த சாலையை அமைத்து செயல்படுத்தியது. சாலை பயன்படுத்தும் வாகனங்களிடமிருந்து 2031 ஆம் ஆண்டு வரை சுங்க கட்டணம் வசூலிக்க அனுமதி வழங்கப்பட்டது.
அதிக சுங்க கட்டணத்தை எதிர்த்து, 2016-ல் நொய்டா குடியிருப்பாளர்கள் நலச்சங்கம் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனுவை தாக்கல் செய்தது. சுங்க கட்டணம் வசூலிக்க தடை விதித்த அலகாபாத் நீதிமன்ற உத்தரவை என்.டி.பி.சி.எல். நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கில், சுங்க கட்டணம் இல்லாததால், நொய்டா டோல் பிரிட்ஜ் நிறுவனத்தின் நிதி நிலை பாதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. 45.72 கோடி ரூபாய் செலவுகளை, வணிகச் செலவுகள், ஊழியர்களுக்கான பரிசுகள், மற்றும் நிறுவனத்தின் தனிப்பட்ட செலவுகளாக சேர்க்கப்பட்டது. மேலும், 20 சதவீத நிரந்தர வருமான பார்முலாவைப் பயன்படுத்தி சுங்க கட்டணம் வசூலிக்கின்றது, இது தேவையற்றதாகவும் நியாயமற்றதாகவும் உள்ளது என்று நீதிமன்றம் கூறியது.
இதனையடுத்து, நீதிமன்றம் சுங்க கட்டணம் வசூலிக்கத் தடை விதித்த அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்தது.