மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர். பாட்டில் குடிநீரை பாதுகாக்கும் நோக்கில் புதிய திட்டங்களை அறிவித்துள்ளார். பிரதம மந்திரியின் நீர் பாசன திட்டத்தின் கீழ், பயன்படுத்தப்படும் நீருக்கு வரி விதிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக விவசாயத்துறையில் நீர் வீணாகாமல் இருப்பதற்காகவே இந்த முயற்சி எடுக்கப்படுவதாக கூறியதாலும், நிலத்தடி நீருக்கு வரி விதிக்கப்படும் என்ற தகவல் விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் நிலத்தடி நீர் பயன்பாட்டின் 83 சதவீதம் விவசாயத்திற்காகவே பயன்படுத்தப்படுகிறது என்பதும் இந்தப் திட்டத்தைப் பலர் எதிர்க்கும் காரணமாக அமைந்துள்ளது.
நாட்டின் பல மாநிலங்களில் நிலத்தடி நீர் கணமீட்டர் மூலம் பயன்படுத்தப்படுகிறது. ஆய்வில் 23 ஆயிரத்து 913 கோடி அளவிலான நீர் விவசாயத்திற்கே பயன்படுகிறது எனத் தெரியவந்துள்ளது. மீதமுள்ள நீர் வீணாகும் சூழ்நிலை காரணமாக மத்திய அரசு, மாநிலங்களுடன் இணைந்து 23 புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்காக ரூ.1600 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், சோதனை கட்டத்தில் உள்ள திட்டம் வெற்றிபெறும்வரை விவசாய பாசனத்திற்கு நீர் உறுதி செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பை உருவாக்கியுள்ளது. அதிகம் நீரை பயன்படுத்தும் மாநிலங்களில், குறிப்பாக தமிழ்நாட்டில், விவசாயத்திற்கான நிலத்தடி நீருக்கு வரி விதிப்பது நியாயமற்றதாகக் கருதப்படுகிறது. இது பயிர்களின் விளைச்சலை குறைக்கலாம் என்றும், சரியான விலை கிடைக்காத சூழ்நிலையிலும் வரி விதிப்பது ஏற்க முடியாதது என்றும் விவசாயிகள் வேதனையை வெளிப்படுத்துகின்றனர். நீருக்காக வரி வசூலித்தால் விவசாயிகள் கடும் நட்டத்தை சந்திக்க நேரிடும் என்றும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
தஞ்சையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. நகர்புற நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு மற்றும் உயர் கல்வித் துறை அமைச்சர் செழியன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். கூட்டத்துக்குப் பின்னர் பேசிய அமைச்சர் நேரு, விவசாய நீருக்கு வரி விதிப்பது மத்திய அரசின் ஒவ்வாத நடவடிக்கையாக இருப்பதாக கூறினார். மத்திய அரசு திட்டத்தில் மாற்றம் செய்யவில்லையெனில் தமிழக முதல்வர் நீதிமன்றத்தை நாடுவார் என்ற எச்சரிக்கையும் அவர் வழங்கினார்.