சென்னை: சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்பட இருந்த ஏர் இந்தியா விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இந்த விமானத்தில் 109 பயணிகள் பயணிக்க இருந்தனர். புறப்படுவதற்கு முன் இறுதி சோதனை செய்யும் போது விமானி, இயந்திரத்தில் சிறிய கோளாறு இருப்பதை கண்டறிந்தார். உடனடியாக விமானம் நிறுத்தப்பட்டு, பயணிகள் விமானத்திலிருந்து இறங்குமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

தொடர்ந்து நிபுணர்கள் குழு விமானத்தை பரிசோதித்து, தேவையான பழுது நீக்கப் பணிகளை மேற்கொண்டனர். சுமார் ஒரு மணி நேரம் நீடித்த சீரமைப்புப் பணிக்குப் பிறகு, விமானம் மீண்டும் புறப்பட அனுமதிக்கப்பட்டது. விமானி கோளாறை தகுந்த நேரத்தில் கண்டுபிடித்ததால், 109 பயணிகளின் உயிரும் பாதுகாப்பாகியது.
இந்நிலையில், விமானம் தாமதமாக புறப்பட்டதால் பயணிகள் பெரும் அவதியடைந்தனர். அண்மைக்காலமாக ஏர் இந்தியா விமானங்களில் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்படுவதால் பயணிகள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். கடந்த அக்டோபர் 17ஆம் தேதி இத்தாலி – டெல்லி ஏர் இந்தியா விமானம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டதும் பெரும் சர்ச்சையாக இருந்தது.
விமானப் பாதுகாப்பு நிபுணர்கள் கூறுவதாவது, “விமானங்களில் ஏற்பட்டும் தொழில்நுட்ப கோளாறுகளை விமானிகள் நேரத்திலேயே கண்டறிதல், பயணிகளின் உயிர் பாதுகாப்பில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஒவ்வொரு சிறிய பிழையையும் கவனிக்காமை பெரிய விபத்துகளுக்கு வழிவகுக்கும்,” என தெரிவித்தனர்.