நாசிக்: HAL-ன் நாசிக் வசதியில் உருவாக்கப்பட்ட முதல் தேஜாஸ்-1A போர் விமானம், அதன் முதல் விமான சோதனையை நிறைவு செய்துள்ளது. ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) பெங்களூருவில் இரண்டு விமான உற்பத்தி வசதிகளைக் கொண்டுள்ளது. ஆண்டுக்கு எட்டு விமானங்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட மூன்றாவது வசதி மகாராஷ்டிராவின் நாசிக்கில் அமைக்கப்பட்டுள்ளது.
தேஜஸ்-1A போர் விமானங்களை தயாரிக்க இந்திய விமானப்படையால் HAL-க்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. தேஜஸ் 1A போர் விமானம் நடுவானில் எரிபொருள் நிரப்பும் திறனுடன் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த விமானத்திற்கான GE F404 என்ஜின்களை 2021-ம் ஆண்டு ரூ.5,375 கோடிக்கு வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் HAL கையெழுத்திட்டது.

ஆனால் அமெரிக்க நிறுவனம் இதுவரை 4 என்ஜின்களை மட்டுமே வழங்கியுள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் கூடுதலாக 8 என்ஜின்களையும், அதன் பிறகு வருடத்திற்கு 20 என்ஜின்களையும் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தாமதம் HAL-ன் தேஜாஸ் 1A விமான உற்பத்தியையும் தாமதப்படுத்தியுள்ளது. இந்த சூழ்நிலையில், நாசிக் மையத்தில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் 1A போர் விமானத்தின் முதல் பறக்கும் சோதனை நேற்று நிறைவடைந்தது.
அப்போது, விமானம் நீர் வணக்கத்துடன் வரவேற்கப்பட்டது. இதற்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சாட்சியாக இருந்தார். முன்னதாக, அவர் இலகுரக போர் விமானம் மற்றும் HDT-40 பயிற்சி விமானத்தின் உற்பத்தி மையத்தையும் திறந்து வைத்தார். ரேடார் மற்றும் ஆயுத சோதனைகள் முடிந்ததும் தேஜஸ் 1A போர் விமானம் இந்திய விமானப்படையில் சேர்க்கப்படும்.