ஐதராபாத்: தெலுங்கானாவும், ஆந்திராவும் எனது இரு கண்கள் என ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கட்சியினர் மத்தியில் சந்திரபாபு நாயுடு பேசியதாவது: தெலுங்கானாவில் நாங்கள் தேர்தலில் போட்டியிடவில்லை. ஆனால் தெலுங்கானாவில் ஏராளமான தொண்டர்கள் உள்ளனர்.
இதுதான் தெலுங்கு தேசம் கட்சியின் பலம். ஆந்திர தேர்தலில் எனக்காக நேரடியாகவோ மறைமுகமாகவோ உழைத்திருக்கிறீர்கள். நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன். தெலுங்கானாவும் ஆந்திராவும் எனது இரு கண்கள். இரு மாநிலங்களிலும் தெலுங்கு தேசம் கட்சி செழிக்க வாழ்த்துகிறேன். தற்போது தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது.
வெவ்வேறு சித்தாந்தங்கள்
தற்போது ரேவந்த் ரெட்டி வளர்ச்சிக்கு தலைமை தாங்குகிறார். இதுதான் தெலுங்கு தேசம் கட்சியின் இலக்கு. இரு மாநிலங்களிலும் உள்ள தெலுங்கு மக்களின் வளர்ச்சியைக் காக்க நான் எப்போதும் தயாராக இருப்பேன். இங்கு காங்கிரஸ் ஆட்சியும், ஆந்திராவில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியும் நடக்கிறது. இருவரும் வெவ்வேறு சித்தாந்தங்கள் கொண்டவர்கள். ஆனால் தெலுங்கு மக்களின் நலன் என்று வரும்போது நாம் இணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.