தீபாவளி கொண்டாட்டம் நெருங்கியுள்ள நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பெரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். ஹைதராபாத் உட்பட மாநிலம் முழுவதும் 33 மாவட்டங்களில் 95 இனிப்பு மற்றும் பலகாரக் கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில், மொத்தம் 100 கிலோ கலப்பட உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மக்கள் தீபாவளி பொருட்கள் வாங்கும் உற்சாகத்தில் இருக்கும் வேளையில் நடந்த இந்த சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிகாரிகள் பலகார உற்பத்தி நிலையங்கள், சில்லறை விற்பனை கடைகள் உள்ளிட்ட இடங்களில் திடீர் ஆய்வுகள் நடத்தினர். இனிப்புகள் மற்றும் காரப்பொருட்களில் தரம் மீறப்பட்டதா, செயற்கை நிறமிகள் சேர்க்கப்பட்டுள்ளனவா என்பதை கவனமாக பரிசோதித்தனர். பல இடங்களில் ஜிலேபி, லட்டு போன்ற இனிப்புகளில் விதிகளை மீறி செயற்கை நிறமிகள் மற்றும் கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டது. இதையடுத்து அவை அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு அங்கேயே அழிக்கப்பட்டன.
அதேபோல், சில கடைகளில் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்ட எண்ணெய் மூலம் உணவுப் பொருட்கள் தயாரிக்கப்பட்டதும் வெளிச்சத்துக்கு வந்தது. சுகாதாரமற்ற சூழலில் இயங்கிய கடைகளுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினர். இதன் மூலம் தீபாவளி சந்தையில் தரமற்ற உணவுகள் விற்கப்படாமல் தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், பொதுமக்கள் இனிப்புகள் வாங்கும் போது உரிமம் பெற்ற கடைகளிலிருந்து மட்டுமே வாங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும் நிறமிகுந்த இனிப்புகள் மற்றும் அசாதாரண வாசனை கொண்ட பொருட்களைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தினர். தீபாவளி பண்டிகையையொட்டி உணவு தரத்திற்கான கண்காணிப்பு தொடர்ந்து நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளனர்.