உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடைபெற உள்ள மகா கும்பமேளா மூலம் 8 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து, என்எல்பி சர்வீசஸ் என்ற சர்வதேச தொழில்நுட்ப நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பிரயாக்ராஜில் 45 நாட்களுக்கு நடைபெறும் மகா கும்பமேளாவில் 1.2 மில்லியன் அல்லது 12 லட்சம் தற்காலிக வேலை வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 8 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பயனடைவார்கள். இந்த தற்காலிக வேலைகள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உந்து சக்தியாக மாறியுள்ளது. மேலும், இந்த கும்பமேளா பிரயாக்ராஜில் வணிகத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், அண்டை பிராந்தியங்களில் வர்த்தகத்தை கணிசமாக மேம்படுத்தும். குறிப்பாக, சுற்றுலா, போக்குவரத்து, தளவாடங்கள், சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் சில்லறை வணிகம் ஆகிய துறைகள் குறிப்பிடத்தக்க வகையில் பயனடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலகின் மிகப்பெரிய மத விழாவான மகா கும்பமேளாவில் 400 மில்லியன் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று உத்தரப் பிரதேச அரசு மதிப்பிட்டுள்ளது. மகா கும்பமேளா பொருளாதார செயல்பாடுகளை கூடுதலாக ரூ.2 லட்சம் கோடிக்கு உயர்த்தும் என்று அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (சிஏஐடி) தெரிவித்துள்ளது. இதுவரை 7.72 கோடி பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.