ஹைதராபாத் நகரில் உள்ள ஓஸ்மானியா பல்கலைக்கழகத்தில் புதிய விடுதிகள் திறப்பு விழா மற்றும் கட்டுமானப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்ட தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டார். தற்போது 25 வயதிலிருந்து தேர்தலில் போட்டியிடும் குறைந்தபட்ச தகுதி வயதை 21 ஆக குறைக்க வேண்டும் என்றார்.

அவர் உரையாற்றியபோது, 21 வயதில் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியில் சேர்ந்து மாவட்டங்களை நடத்துகின்றனர். அதேபோல, 21 வயது ஆனவர்களுக்கு வாக்குரிமை வழங்கப்படுகின்றது. ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு 25 வயது வரையறை அவசியமா என்று கேள்வி எழுப்பினார். இளம் தலைமுறையின் தலைமைத்துவம் நாட்டுக்கு மிக அவசியம் என்றும் வலியுறுத்தினார்.
முன்பு வாக்குரிமைக்கான தகுதி வயது 21 ஆக இருந்ததை முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 18 ஆக குறைத்தார் எனவும் அவர் நினைவூட்டினார். எனவே தேர்தலில் போட்டியிடும் குறைந்தபட்ச வயதையும் 21 ஆகக் குறைக்க அரசியலமைப்புச் சட்டத்திலும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்திலும் திருத்தம் செய்ய வேண்டும் என்று கூறினார்.
பார்லிமென்ட் நிலைக்குழு ஏற்கனவே தேர்தலில் போட்டியிடும் குறைந்தபட்ச வயதை 18 ஆகக் குறைக்கலாம் என்று பரிந்துரைத்திருப்பதையும் அவர் குறிப்பிட்டார். தெலுங்கானாவில் 21 முதல் 35 வயது வரையிலானவர்கள் 65 சதவீதம் உள்ளனர். ஆனால் சட்டமன்ற உறுப்பினர்களின் சராசரி வயது 52 முதல் 57 வரை உள்ளது. மொத்தம் 119 எம்எல்ஏக்களில் ஆறு சதவீதம் பேர் மட்டுமே 25 முதல் 40 வயது வரையிலானவர்கள்; 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் 60 சதவீதம் உள்ளனர்.
2024 தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் மூவர் மட்டுமே 25 வயது நிரம்பியவர்கள். இதனால் குறைந்தபட்ச வயதை 21 ஆகக் குறைத்தால் சட்டமன்றத்தின் அமைப்பு பெரிய அளவில் மாறும் என அவர் வலியுறுத்தினார். மேலும், அனைவருக்கும் தரமான கல்வி வழங்குவதில் தனது அரசு உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.