திருமலை: கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் மல்லேஷ் நாகரத்னம்மா. இவர் தனது மகன் மஞ்சுநாத்(15) மற்றும் குடும்பத்தினர் கடந்த 22ல் ஏழுமலையானை தரிசிக்க திருமலை வந்தனர்.
சுவாமி தரிசனம் முடித்த நிலையில் இவர்கள் அனைவரும் தரி கொண்ட வெங்கமாம்பா அன்ன பிரசாத கூடத்தில் சாப்பிட வரிசையில் காத்திருந்தனர்.
அப்போது கூட்ட நெரிசல் அதிகரித்தது. கேட் திறந்தவுடன் மல்லேஷ் நாகரத்னம்மா குடும்பத்தினர் அன்னபிரசாத கூடத்திற்கு செல்வதற்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டதாக தெரிகிறது.
இதில் கீழே விழுந்த மஞ்சுநாத் மீது பலர் மிதித்து சென்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் சிறுவன் மஞ்சுநாத் சுயநினைவு இழந்து விழுந்தான்.
உடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுவன் மஞ்சுநாத் நேற்று பரிதாபமாக உயிரிழந்தான். ஆனால், கூட்ட நெரிசலில் சிக்கி சிறுவன் இறக்கவில்லை. அவனுக்கு ஏற்கனவே இதய நோய் இருந்தது என்று திருப்பதி தேவஸ்தானம் அறிக்கை வெளியிட்டுள்ளது.