டெல்லி: தலைமை தேர்தல் ஆணையர் நியமனத்தை எதிர்த்து மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். தேர்தல் ஆணையர் நியமன சட்டத்துக்கு எதிரான வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ள நிலையில், புதிய தலைமை தேர்தல் ஆணையரை மத்திய அரசு நியமித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஞானேஷ் குமார் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த நியமனத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
அதில், ஜனநாயகத்தை கேலி செய்யும் வகையில் புதிய தலைமை தேர்தல் கமிஷனர் நியமிக்கப்பட்டுள்ளார். உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகளை மீறி மத்திய அரசு செயல்படுகிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை உச்ச நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புகளை மீறுவதாக உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். தலைமை தேர்தல் ஆணையர் தேர்வு தொடர்பான வழக்கு நாளை விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையர்கள் நியமனச் சட்டத்துக்கு எதிரான வழக்கு நாளை விசாரணை பட்டியலில் 41-வது இடத்தில் உள்ளது. விசாரணை வரிசையில் 41-வது வழக்காக உள்ள இந்த வழக்கை முதல் வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.