புதுடெல்லி: மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ள மத்திய சுகாதார அமைச்சகம், மருத்துவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு மீண்டும் பணியைத் தொடருமாறு கேட்டுக் கொண்டுள்ளது. சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, டெல்லி அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள் ரெசிடென்சி டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (FORDA), இந்திய மருத்துவ சங்கம் (IMA) MA) மற்றும் குடியுரிமை மருத்துவர்கள் சங்கங்களின் பிரதிநிதிகள் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் அதிகாரிகளை புதுதில்லியில் சந்தித்தனர்.
பணியிடங்களில் சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பு குறித்து தொழிற்சங்கங்கள் தங்கள் கவலைகளை எழுப்பியுள்ளன. பிரதிநிதிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்த மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், சுகாதார நிபுணர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தது. அனைத்து சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும், அரசாங்கம் நிலைமையை நன்கு அறிந்திருப்பதாகவும், அவர்களின் கோரிக்கைகள் குறித்து அக்கறை கொண்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது. 26 மாநிலங்கள் ஏற்கனவே தங்கள் மாநிலங்களில் உள்ள சுகாதாரப் பணியாளர்களைப் பாதுகாப்பதற்கான சட்டங்களை இயற்றியுள்ளன. சங்கங்கள் தெரிவித்த கவலைகளைக் கருத்தில் கொண்டு, சுகாதார நிபுணர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அத்தகைய அனைத்து நடவடிக்கைகளையும் பரிந்துரைக்க ஒரு குழுவை அமைப்பதாக அமைச்சகம் அவர்களுக்கு உறுதியளித்தது.
மாநில அரசுகள் உட்பட அனைத்து பங்குதாரர்களின் பிரதிநிதிகளும் தங்கள் ஆலோசனைகளை குழுவுடன் பகிர்ந்து கொள்ள அழைக்கப்படுவார்கள். “பொதுமக்கள் நலன் கருதியும், அதிகரித்து வரும் டெங்கு மற்றும் மலேரியா நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டும், பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களை மீண்டும் பணியைத் தொடருமாறு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
24 மணி நேர வேலைநிறுத்தம்: கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கு நீதி கேட்டு நாடு முழுவதும் மருத்துவர்கள் இன்று (ஆக. 17, சனிக்கிழமை) 24 மணி நேர வேலைநிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனர். இதனால் நாடு முழுவதும் மருத்துவ சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை காலை 6 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி வரை அத்தியாவசிய மருத்துவ சேவைகள் மற்றும் அவசர சிகிச்சைகள் தவிர மற்ற மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய மருத்துவ சங்கத்தின் (ஐஎம்ஏ) தேசிய தலைவர் டாக்டர் ஆர்.வி.அசோகன், “கொல்கத்தா மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலையிட வேண்டும். பிரதமர் தலையிட வேண்டிய நேரம் வந்துவிட்டது. இது தொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுதுவோம்,” என்றார். .
பிரதமர் மோடி ஆகஸ்ட் 15-ம் தேதி தனது சுதந்திர தின உரையில் பெண்கள் பாதுகாப்பு குறித்த தனது கவலையை வெளிப்படுத்தினார்.நிச்சயமாக இது அவர் அக்கறை காட்டுகிறார் என்பதற்கு அடையாளம். எனவே, பிரதமருக்கு கடிதம் எழுதுவது மிகவும் பொருத்தமாக இருக்கும். ஐஎம்ஏ அதைச் செய்யும். ஐஎம்ஏ பிரதிநிதிகள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெகத் பிரகாஷ் நட்டாவை சந்தித்து ஆலோசனை நடத்தினர். இனி அரசுதான் பதில் சொல்ல வேண்டும். நாம் கேட்பது அவர்களால் முடியாத ஒன்றல்ல. மிக அடிப்படை உரிமையான வாழ்வுரிமையைத்தான் கேட்கிறோம்.
மருத்துவர்களின் போராட்டத்திற்கு நாடு முழுவதும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த அநீதிக்கு எதிராக மருத்துவர்கள் ஒன்றுபட்டு நிற்கின்றனர். நாங்கள் அவசர சேவைகளை கவனித்து வருகிறோம். அனைத்து தரப்பு மக்களும் மருத்துவர்களுக்காக நிற்கின்றனர். பெண்களின் பாதுகாப்பு பிரச்சினை என்பதால் இது சர்வதேச கவனத்தைப் பெற வேண்டும் என்று நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம்,” என்று அவர் கூறினார்.