பெங்களூரு: முதல்வர் சித்தராமையாவின் மனைவிக்கு முறைகேடாக நிலம் ஒதுக்கியதாக எழுந்த புகாரை விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி பி.என்.தேசாய் தலைமையில் ஒருநபர் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது.
‘முடா’ எனப்படும் மைசூரு நகர மேம்பாட்டு ஆணையம் சார்பில், முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு சட்ட விரோதமாக இடம் ஒதுக்கியதாக பா.ஜ.க மற்றும் ம.ஜ.த. குற்றம் சாட்டுகின்றன. ஆனால், தனது மகன் நன்கொடை அளித்ததாக முதல்வர் கூறினார். ஆனால், முறைகேடாக நிலம் வழங்கப்பட்டதாகக் கூறி, முதல்வர் பதவி விலகக் கோரி, பா.ஜ.க தரப்பில் போராட்டம் நடத்தினர்.
இதனிடையே இன்று சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கும் நிலையில் மூடா ஊழல் குறித்து கேள்விகளை எழுப்பி அரசை திணறடிக்க எதிர்க்கட்சிகள் தயாராக உள்ளன.
இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் எதிரொலியாக கர்நாடக உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி பி.என்.தேசாய் தலைமையில் ஒருநபர் விசாரணை கமிஷன் அமைத்து உள்துறை அமைச்சகம் திடீரென உத்தரவிட்டது.
விசாரணையை முடித்து, அரசிடம் அறிக்கை தாக்கல் செய்ய, ஆறு மாதங்களுக்குள் கமிஷன் கெடு விதித்துள்ளது. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு மைசூர் நகர்ப்புற வளர்ச்சி ஆணையம் மற்றும் மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.