லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேக விழா ஜனவரி 22, 2024 அன்று நடைபெற்றது. இந்த பிரம்மாண்ட விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்த விழாவில் சர்வதேச தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து அயோத்தி ராமர் கோயிலில் பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து, அயோத்தி ராமர் கோவிலுக்கு நாடு முழுவதும் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து வருகின்றனர். அயோத்தி ராமர் கோயில் பாரம்பரிய கட்டுமான முறைப்படி 380 அடி நீளம் (கிழக்கு-மேற்கு), 250 அடி அகலம் மற்றும் 161 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. கோயிலில் மொத்தம் 392 தூண்களும், 44 கதவுகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், கோயிலின் சில பகுதிகளில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ராமர் கோவில் கட்டுமான பணிகள் அனைத்தும் இந்த ஆண்டே முடிவடையும் என அயோத்தி ராமர் கோவில் கட்டுமான குழு தலைவர் நிரிபேந்திர மிஸ்ரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது;- அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி 2025-ல் முழுமையாக நிறைவடையும்.
ஏப்ரலில் துளசிதாஸரின் சிலை பக்தர்களின் பார்வைக்காக திறக்கப்படும். ராமாயண காலத்து செடிகளை ஆய்வு செய்து கோவில் வளாகத்திற்குள் அந்த செடிகளை நடுவதற்கு குழு அமைக்கப்பட்டுள்ளது. கோவில் வளாகத்திற்குள் இன்னும் 20 ஆயிரம் கன அடி கற்கள் வைக்க வேண்டும்.