புதுடில்லி: என்.சி.இ.ஆர்டி. பாடப்புத்தகங்களை ஆர்எஸ்எஸ் இயக்குகிறது என்ற குற்றச்சாட்டை பேராசிரியர் மைக்கேல் டானினோ தெளிவுபடுத்தியுள்ளார். சமூக அறிவியல் பாடப்புத்தக திருத்த குழுவின் தலைவராக இருக்கும் அவர், பாடப்புத்தகங்களை மாற்றும்படி யாரும் அழுத்தம் கொடுக்கவில்லை என்று கூறினார்.
சிபிஎஸ்இ பள்ளிகளில் பயன்படுத்தப்படும் என்.சி.இ.ஆர்டி. பாடப்புத்தகங்களில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சமீபத்தில் 12ஆம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் முகலாயர்களைச் சார்ந்த பகுதிகள் நீக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. இதனால் எதிர்க்கட்சிகள் அரசியல் நோக்கில் வரலாறு மாற்றப்படுகிறது என்று குற்றம்சாட்டின.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த மைக்கேல் டானினோ, ஆர்எஸ்எஸ் அல்லது மத்திய அரசு எங்களை எந்தவிதத்திலும் கட்டாயப்படுத்தவில்லை எனத் தெளிவுபடுத்தினார். எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.களிடமிருந்து கோரிக்கைகள் வருவது இயல்பு எனினும், மாணவர்களுக்கு தேவையான விஷயங்கள் மட்டுமே பாடப்புத்தகத்தில் இடம் பெறுகின்றன என அவர் கூறினார்.
முகலாயர் வரலாறு நீக்கப்படவில்லை; அது மறுசீரமைக்கப்பட்டு சுதந்திரப் போராட்டக் கருப்பொருளில் இடம் பெற்றுள்ளதாக அவர் விளக்கம் அளித்தார். இந்திய அரசர்கள் முகலாயர்களுக்கு எதிராக போராடிய வரலாறு, பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன்னரே இருந்து வந்தது என்பதும் இதில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. வரலாற்றை மிகைப்படுத்தாமல் நடந்ததை நடந்தபடி காட்டுவதே நோக்கம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், சமூக அறிவியல் பாடப்புத்தகத்தின் இரண்டாம் பகுதி வரும் அக்டோபரில் வெளியிடப்படும் எனவும் மைக்கேல் டானினோ தெரிவித்தார். இதன் மூலம் மாணவர்கள் முழுமையான வரலாற்றை அறிந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.