புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் பூரியில் புகழ்பெற்ற ஜெகநாதர் கோவில் உள்ளது. கோவில் வளாகத்தின் மீது நேற்று அதிகாலை 4.10 மணியளவில் மர்ம ஆளில்லா விமானம் பறந்தது. சுமார் 100 அடி உயரத்தில் ஆளில்லா விமானம் அரை மணி நேரம் வட்டமிட்டது. இதனை பலரும் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். பூரி ஜெகநாதர் கோவில் வளாகத்தில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தடையை மீறி ஆளில்லா விமானம் பறந்தது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒடிசா சட்ட அமைச்சர் பிருத்விராஜ் ஹரிச்சந்திரன் கூறும்போது, “பூரி கோவில் வளாகத்தில் தடையை மீறி ஆளில்லா விமானம் பறந்துள்ளது. இதில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார். இதுகுறித்து மாவட்ட எஸ்பி பினக் மிஸ்ரா கூறுகையில், ‘‘கோயில் வளாகத்தில் ஆளில்லா விமானம் பறந்தது குறித்து விசாரணை நடத்த 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சம்பந்தப்பட்டவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்’’ என்றார். ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் வரும் 8-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை வெளிநாடு வாழ் இந்தியர் தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு விசேட மாநாடு ஒன்று இடம்பெறவுள்ளது. இதில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் உட்பட உலகம் முழுவதிலுமிருந்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 10,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர்.
வரும் 9-ம் தேதி நடைபெறும் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். இதையொட்டி தலைநகர் புவனேஸ்வர் மட்டுமின்றி புரி, கட்டாக் உள்ளிட்ட நகரங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.