புதுடில்லி: இந்தியாவின் அணுசக்தி உற்பத்தி துறையில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மாற்றம் ஏற்படுத்த, மத்திய அரசு 1962ஆம் ஆண்டு இயற்றப்பட்ட அணுசக்தி சட்டத்தில் திருத்தங்களை கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், அரசு கட்டுப்பாட்டில் மட்டுமின்றி, தனியார் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் இந்த துறையில் பங்கு பெற வழிவகை செய்யப்பட உள்ளது.

மத்திய அரசின் தற்போதைய முயற்சி, பிரதமர் மோடியின் பழைய சட்டங்களை நீக்கி புதிய சட்டங்களை உருவாக்கும் பணியின் தொடர்ச்சியாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பல முக்கியமான சட்ட மாற்றங்களை கொண்டுவந்துள்ள அரசு, அணுசக்தி துறையிலும் புதிய திசைமாற்றத்திற்குத் தயாராகியுள்ளது.
இந்த சட்ட மாற்றம், வரவிருக்கும் மழைக்கால கூட்டத் தொடரில் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. அணுசக்தி துறையில் இந்தியாவின் நிலையை மேம்படுத்துவதற்காக கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்டில் நிதி அமைச்சர் ரூ.20 ஆயிரம் கோடி நிதியை ஒதுக்கியதாக அறிவித்திருந்தார். இதன் அடிப்படையில், சிறிய அளவிலான அணு உலைகளை உருவாக்கும் திட்டம் அமலுக்கு வரும்.
இதில் தனியார் பங்கு இடம்பெறும். 2033ம் ஆண்டுக்குள் ஐந்து சிறிய அணு உலைகள் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அணுகுமுறையால், இந்தியாவின் அணுசக்தி சட்டத்தில் 2 முக்கியமான திருத்தங்கள் கொண்டு வரப்பட உள்ளன.
முதலாவது, தொழில்துறையை ஊக்குவிக்க சட்டத் தடைகள் நீக்கப்படவுள்ளன. இரண்டாவது, விபத்து நேரத்தில் உபகரணங்களை வழங்கும் நிறுவனங்கள் மீது குறைந்த பொறுப்பே விதிக்கப்படும். அவர்களுக்கு நஷ்டஈடு தரும் விதத்தில் விதிகள் சீரமைக்கப்படும். இதனால் கால வரம்பு மற்றும் இழப்பீட்டின் உச்ச வரம்பு வரையறுக்கப்படும்.
இந்தியாவில் தற்போது 24 அணு மின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. அவை மூலமாக 8.1 ஜிகாவாட் மின்சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது. புதிய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டால், 2032ம் ஆண்டுக்குள் 20 ஜிகாவாட் திறனை அடைய முடியும் என மத்திய அரசு நம்புகிறது.
தற்போது, அணுசக்தித் துறை முழுமையாக அரசு நிறுவனங்கள் மூலம் நடத்தப்படுகிறது. இதில் நியூக்ளியர் பவர் கார்ப்பரேசன் ஆஃப் இந்தியா லிமிடெட் (NPCIL), நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேசன் (NTPC) ஆகியவை முக்கிய பங்காற்றுகின்றன.
இப்போது தனியார் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் சட்ட மாற்றம் வருவது, இந்தியா-அமெரிக்கா சிவில் அணுசக்தி ஒப்பந்தத்திற்கு வணிக செயல்பாடுகளை வழங்கும் முக்கிய முயற்சியாக கருதப்படுகிறது.
இந்த வகை மாற்றம் சாத்தியமான சூழலாக இருப்பதால், எதிர்காலத்தில் இந்திய அணுசக்தித் துறை ஒரு பெரிய மாற்றத்தை நோக்கி பயணிக்கவுள்ளதாக வட்டாரங்கள் உறுதி செய்கின்றன.