மும்பை: இந்தியில் நடிகர் ஆனந்த் மகாதேவன் இயக்கிய ‘பூலே’ படத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால், படத்தின் ரிலீஸ் தேதி 2 வாரங்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஜாதி மற்றும் பாலின பாகுபாட்டுக்கு எதிராக குரல் கொடுத்த ஜோதிராவ் பூலே மற்றும் அவரது மனைவி சாவித்ரிபாய் பூலேயின் வாழ்க்கை வரலாறு படமான ‘பூலே’ நேற்று முன் தினம் திரைக்கு வர இருந்தது. நடிகரும் இயக்குனருமான ஆனந்த் மகாதேவன் இயக்குகிறார்.
இந்நிலையில் படத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் படத்தின் ரிலீஸ் தேதி 2 வாரங்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவை சேர்ந்த பிராமண சமூகத்தினர் படத்தை வெளியிடுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, படத்தில் தங்களை தவறாக சித்தரிப்பதாக புகார் தெரிவித்தனர். சில இந்துத்துவா அமைப்புகளும் படம் பொய்யான தகவல்களை கூறுவதாக சில குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன.

இந்நிலையில் இப்படத்தை முதலில் பார்த்த சென்சார் போர்டு குழுவினர் ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனர். பின்னர், பல்வேறு தரப்பில் இருந்து வந்த விமர்சனங்களையும், கடும் எதிர்ப்பையும் கண்டு, படத்தில் சில காட்சிகள் மற்றும் டயலாக்குகளை ‘கட்’ செய்யுமாறு அறிவுறுத்தினர். சாதி குறித்த குரல்வளம் மற்றும் சாதி அமைப்பை விளக்கும் காட்சிகளை நீக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
சில டயலாக்குகளை மாற்ற வேண்டும் என்று கேட்டுள்ளனர். பிராமண சமூகத்திடம் இருந்து வந்த கடிதங்கள் குறித்து ஆனந்த் மகாதேவன் கூறும்போது, ‘படத்தின் ட்ரெய்லர் குறித்து சில தவறான புரிதல்கள் உள்ளன. படத்தைப் பார்ப்பதில் சிரமம் ஏற்படாமல் இருக்க சில சந்தேகங்களை நிவர்த்தி செய்ய வேண்டும்’ என்றார்.