இந்திய வனங்களின் பெருமை ஒருகாலத்தில் சிவிங்கிப்புலிகளாக இருந்தது. ஆனால் தொடர்ச்சியான வேட்டை காரணமாக 1950ம் ஆண்டுக்குப் பிறகு அவை முற்றிலும் அழிந்து போனதாக அறிவிக்கப்பட்டது. சத்தீஸ்கர் வனப்பகுதியில் கடைசியாக கண்டுபிடிக்கப்பட்ட சிவிங்கிப்புலியின் பின்னர் கடந்த 70 ஆண்டுகளாக இந்தியாவில் அந்த இனத்தை எங்கும் காணவில்லை.

அந்த இனம் அழிந்துவிட்டது என்பதற்குப் பின்பும் அதை மீண்டும் கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டது. நமீபியாவில் இருந்து சிவிங்கிப்புலிகள் கொண்டு வரப்பட்டு மத்திய பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில் பிரதமர் மோடி தலைமையில் விடுவிக்கப்பட்டன. ஆனால் கடுமையான வெப்பநிலை, சூழலியல் மாற்றங்கள் போன்ற சவால்களால் சில புலிகள் உயிரிழந்தன.
இந்நிலையில், 2023ம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி குனோ பூங்காவில் பிறந்த முகி என்ற குட்டி தற்போது மூன்று வயதானது. வெப்ப அலையில் தனது மூன்று உடன்பிறப்புகளை இழந்தும், தாயால் கைவிடப்பட்டும் உயிர் பிழைத்த முகி, நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்ந்து வருவது வனத்துறைக்கு மிகப்பெரும் வெற்றியாகக் கருதப்படுகிறது.
தற்போது குனோ தேசிய பூங்காவில் நமீபியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட சிவிங்கிப்புலிகளும், அவற்றின் குட்டிகளும் சேர்த்து மொத்தம் 25 புலிகள் உள்ளன. 70 ஆண்டுகளுக்கு பிறகு இந்த இனம் இந்தியாவில் மீண்டும் வாழ்ந்து வருவதும், இனப்பெருக்கம் செய்வதும்தான் எதிர்காலத்துக்கு பெரிய நம்பிக்கை என வனத்துறை அதிகாரிகள் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.