பசுமை போர்த்திய குளுமை மலைகளின் மடியில், கோடை வெயிலை தாங்க முடியாமல் ஓடியோடி வந்த சுற்றுலாப் பயணிகளை வரவேற்றது பஹல்காம். வாடைக்காற்று வரவேற்பு பாடினது. பகலில் வெப்பம் இல்லை, இரவில் குளிர்ச்சி. இயற்கையின் கனிவில் குதூகலிக்க வந்திருந்தவர்கள் எதிர்பாராதவிதமாக பதற்றத்தில் மாட்டிக்கொண்டனர்.
பயங்கரவாதிகளின் கைகளில் துப்பாக்கிகள் படபடவென வெடித்தன. உயிர்கள் சடசடவென மடிய்ந்தன. புல்வெளி மூடிய பள்ளத்தாக்குகளில் மனித ரத்தமே பாசன நீராகியது. பாச உறவுகளின் கதறல்கூட்டம், மலைகளின் முகடுகளில் எதிரொலிக்க, அந்த காட்சி உயிருள்ள ஒவ்வொருவரின் உள்ளங்கையை நசுக்கியது.

தன் குளிர்மடியில் மகிழ்ச்சியுடன் வந்தவர்களின் உயிர் பறிக்கப்பட்ட வேதனையில் மலைகளே மௌனமாகிக் கொண்டன. சிரிப்புடன் வந்தவர்கள் சோகத்தில் சாய்ந்தனர். உறவுகளை இழந்தவர்களின் கண்ணீர் தூங்க விடாமல் செய்தது.
ஆறுதலுக்கே வார்த்தைகள் தேய்ந்துவிட்டன. பயங்கரவாதம், எதையும் வென்றதில்லை. இன்றும் அதே நிலை. ஆனால் இன்று இழந்த உயிர்களின் கனமான நினைவுகள், பஹல்காமின் மடியில் நிலைத்திருக்கின்றன.