டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் நாளை முதல் பொது சிவில் சட்டம் அமலுக்கு வருகிறது. இந்தியாவில், திருமணம், விவாகரத்து, தத்தெடுப்பு மற்றும் வாரிசுரிமை போன்ற விஷயங்களில் ஒவ்வொரு மதத்திலும் வெவ்வேறு நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. மாறாக, அனைத்து மதத்தினரும் ஒரே சட்டத்தைப் பின்பற்றும் வகையில் பொது சிவில் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று பாஜக நீண்டகாலமாக வலியுறுத்தி வருகிறது.
கடந்த 2002-ம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கடந்த ஆண்டு உத்தரகாண்ட் சட்டசபையில் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான பாஜக அரசு பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றியது. இந்நிலையில் நாளை முதல் இந்த சட்டம் அமலுக்கு வருகிறது.
இதுகுறித்து, உத்தரகாண்ட் முதல்வரின் செயலர் சைலேஷ் பகோலி நேற்று கூறுகையில், “பிரதமர் நரேந்திர மோடி, வரும் 28-ம் தேதி உத்தரகாண்ட் வருகிறார். அவரது வருகைக்கு ஒரு நாள் முன்னதாகவே மாநிலத்தில் பொது சிவில் சட்டம் அமலுக்கு வருகிறது. பொது சிவில் சட்ட இணையத்தளம் எதிர்வரும் 27-ம் தேதி மதியம் 12.30 மணியளவில் செயலகத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது. முதல்வர் புஷ்கர் சிங் தாமி திறந்து வைக்கிறார். பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் நாட்டிலேயே முதல் மாநிலமாக உத்தரகாண்ட் இருக்கும் என்றார்.