தொழில்நுட்ப வளர்ச்சியின் காலத்தில் பழைய சட்டங்களை புதுப்பிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதன் அடிப்படையில், 1872ஆம் ஆண்டு உருவான இந்திய சாட்சிய சட்டத்திற்கு இடம் மாற்றமாக, ‘பாரதிய சாக்ஷிய ஆதினியம் (BSA), 2023’ என்ற புதிய சட்டம் கொண்டு வரப்பட்டது. இச்சட்டம், டிஜிட்டல் சாட்சிகளை நீதிமன்றத்தில் எவ்வாறு ஏற்கலாம் என்ற முறையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

BSA-வில், வாட்ஸ்அப் மெசேஜ்கள், ஸ்கிரீன் ஷாட்கள், ஆடியோ நோட்ஸ், PDF ஆகியவை நீதிமன்றத்தில் ஆதாரமாக ஏற்கப்படலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அவை தகுதி பெற சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும். முக்கியமாக, இந்த மெசேஜ்கள் இருந்த அசல் சாதனம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அதிலிருந்து உரிய சான்றிதழ்கள் பெறப்பட்ட பிறகே, அது முதன்மை ஆதாரமாக கருதப்படும். இல்லையெனில், அவை இரண்டாம் நிலை ஆதாரமாக மட்டுமே பயன்படுத்தப்படும்.
மேலும், ஃபார்வேர்ட் செய்யப்பட்ட மெசேஜ்கள், அந்த மெசேஜின் உண்மைத் தன்மையை நிரூபிக்க முடியாவிட்டால் சட்ட ரீதியில் ஏற்கப்படாது. குறிப்பாக, வெறுப்பை ஊட்டும் அல்லது தேசிய பாதுகாப்பு குறித்த பதிவுகள், சட்டத்தை மீறியதாகக் கருதப்படும். இத்தகைய சாட்டுகள், சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கையை எதிர்கொள்ளும். வாட்ஸ்அப்பில் அமைதியாக இருப்பதும், அந்த மெசேஜ் ஏற்கப்பட்டது என கருதப்படும் சூழ்நிலை கூட உருவாகக்கூடும்.
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஒவ்வொரு மெசேஜும், மீமும், ஸ்கிரீன் ஷாட்டும் கூட நீதிமன்றத்தில் உங்கள் மீது சாட்சியாக இருக்கக்கூடிய காலம் இது. எனவே, சட்ட விதிகளை மனதில் வைத்துக்கொண்டு மெசேஜ் அனுப்பும் பழக்கத்தைப் பெறுவது அவசியம். இல்லை என்றால், உங்களுடைய போன் தான் உங்களை சட்ட சிக்கலில் மாட்ட வைக்கும்.