திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு அலிபிரி வழியாக நடைபாதை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். கடந்த 3 நாட்களுக்கு முன்பு அலிபிரியில் இருந்து நடைபாதை 7-வது மைல் அருகே சிறுத்தை நடமாட்டத்தை கண்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். நடைபாதையில் சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்டதால், பக்தர்கள் கோயிலுக்கு நடைபாதையில் செல்ல தேவஸ்தான கண்காணிப்பு மற்றும் வனத்துறை அதிகாரிகள் கட்டுப்பாடு விதித்துள்ளனர். அதன்படி, அலிபிரியில் இருந்து திருமலைக்கு நடைபயணம் மேற்கொள்ளும் பக்தர்கள் தனித்தனியாகவோ அல்லது குழுக்களாகவோ காலை 5 மணி முதல் மதியம் 2 மணி வரை வழக்கம்போல் அனுமதிக்கப்படுகின்றனர்.
அதன்பின், பக்தர்கள் குழுக்களாக அனுப்பப்படுகின்றனர். ஒவ்வொரு குழுவிலும் 70 முதல் 100 பக்தர்கள் இருக்க வேண்டும் என விஜிலென்ஸ் குழுவினர் கண்காணித்து வருகின்றனர். மேலும், 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மதியம் முதல் அனுமதிக்கப்படுவதில்லை. இரவு 10 மணிக்கு மூடப்பட்ட அலிபிரி நடைபாதை இனி இரவு 9.30 மணிக்கு மூடப்படும். கடந்த காலங்களில் சிறுத்தை தாக்கி சிறுமி உயிரிழந்தார். அதற்கு முன், மற்றொரு குழந்தை பலத்த காயம் அடைந்தது. எனவே, நடைபாதையில் குழந்தைகளை அனுமதிப்பது குறித்து சிறப்பு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
வனப்பகுதியை சுற்றி பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் மூலம் சிறுத்தை நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே சிறுத்தையின் நடமாட்டத்தை வைத்து மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் வனத்துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அதற்கு முன், பக்தர்களுக்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க, தேவையான நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். ‘ஃபாஸ்டேக்’ ஐ மீண்டும் கொண்டு வர கோரிக்கை திருப்பதியில் இருந்து திருமலை செல்லும் வாகனங்கள் அலிபிரி சுங்கச்சாவடியில் ‘ஃபாஸ்டேக்’ மூலம் கட்டணம் வசூலித்தனர்.
ஆனால் கடந்த 1 வாரமாக ‘ஃபாஸ்டேக்’ மூலம் பணம் எடுக்கப்படவில்லை. அதற்கு பதிலாக, ‘கூகுள் பே, போன் பே’ மூலம் பணம் செலுத்துமாறு கோவில் அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால், வாகனங்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது. நேரமும் வீணாகிறது. எனவே, மீண்டும் ‘ஃபாஸ்டேக்’ மூலம் வாகன கட்டணத்தை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.