இந்திய இணையம் மற்றும் மொபைல் சங்கம் (ஐஏஎம்ஏஐ) மற்றும் சந்தை ஆராய்ச்சி நிறுவனமான கன்டர் இணைந்து ‘இந்தியாவில் இணையம் 2024’ என்ற தலைப்பிலான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் இணைய பயனர்களின் எண்ணிக்கை 2024-ல் 886 மில்லியனாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 8% அதிகமாகும்.
இந்த எண்ணிக்கை 2025 இல் 900 மில்லியனைத் தாண்டும். நாட்டின் இணைய பயனர்களில் 55% பேர் (488 மில்லியன்) கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள். ஆனால் நகர்ப்புறங்களில், இந்த எண்ணிக்கை 397 மில்லியனாக இருந்தது. இணைய பயனர்களில் 47% பேர் பெண்கள். சராசரியாக, இந்தியர்கள் ஒரு நாளைக்கு 90 நிமிடங்கள் ஆன்லைனில் செலவிடுகிறார்கள், கிராமப்புறவாசிகள் 89 நிமிடங்களும், நகர்ப்புறவாசிகள் 94 நிமிடங்களும் செலவிடுகிறார்கள்.
இணைய பயன்பாட்டில் கேரளா (72%), கோவா (71%), மகாராஷ்டிரா (70%) ஆகியவை முதல் 3 இடங்களில் உள்ளன. பீகார் (43%), உத்தரபிரதேசம் (46%), மற்றும் ஜார்கண்ட் (50%) ஆகியவை கடைசி 3 இடங்களில் உள்ளன.