புதுடெல்லி: நாடு முழுவதும் உள்ள மக்களவைத் தொகுதிகள், மாநிலங்களவைத் தொகுதிகள் மற்றும் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட உள்ளாட்சி பதவிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்திய அரசு நீண்ட நாட்களாக திட்டமிட்டு வந்தது. ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு பல்வேறு கட்ட ஆய்வுகளை மேற்கொண்டு 18,000 பக்க அறிக்கையை ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம் கடந்த மார்ச் மாதம் சமர்ப்பித்தது.
இதன் அடிப்படையில், ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதா உருவாக்கப்பட்டது. இந்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை கடந்த 12-ம் தேதி ஒப்புதல் அளித்தது. அதன்படி, மக்களவை மற்றும் சட்டப் பேரவைகள் தொடர்பான மசோதாவும், யூனியன் பிரதேசங்கள் தொடர்பான மசோதாவும் தாக்கல் செய்யப்பட உள்ளன. இந்த மசோதாக்கள் நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட உள்ளன.
ராம்நாத் கோவிந்த் கமிட்டியின் பரிந்துரையின்படி, மக்களவை மற்றும் மாநில சட்டப் பேரவைகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும். இந்த பொதுத் தேர்தலுக்குப் பிறகு இன்னும் 100 நாட்களில் நாடு முழுவதும் உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக நடத்தப்படும். இதற்காக தேசிய அளவில் ஒரே வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படும். ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்தை அமல்படுத்துவது கடினம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
மக்களவை மற்றும் சட்டப் பேரவைகள் முன்கூட்டியே கலைக்கப்பட்டால் என்ன செய்வது? என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. இதற்கு தீர்வு காணும் வகையில், ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதா, இடைத்தேர்தல் நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது, லோக்சபா அல்லது சட்டப் பேரவைகள் முன்கூட்டியே கலைக்கப்பட்டால், இடைத்தேர்தல் மட்டுமே நடத்தப்படும்; பொதுத் தேர்தல் நடத்தப்படாது. உதாரணமாக, ஒரு மாநில சட்டசபை 2 ஆண்டுகளுக்குப் பிறகு கலைக்கப்பட்டால், அந்த மாநிலத்தில் இடைத்தேர்தல் நடத்தப்படும்.
அங்கு பதவியேற்கும் புதிய அரசு 3 ஆண்டுகள் மட்டுமே பதவியில் இருக்கும். ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்த பிறகு, மற்ற மாநிலங்களுடன் அந்த மாநிலத்தின் சட்டசபைக்கும் பொதுத் தேர்தல் நடத்தப்படும். மக்களவைக்கும் இதே நடைமுறை பின்பற்றப்படும். அதன்படி, ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் பொதுத்தேர்தல் நடத்தப்படும்.
மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுடன், நடப்பு குளிர்கால கூட்டத்தொடரில், ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதாவை, மத்திய சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், லோக்சபாவில் நாளை தாக்கல் செய்வார் என அறிவிக்கப்பட்டது. பார்லிமென்ட் கூட்டத்தொடர் வரும் 20-ம் தேதி முடிவடைய உள்ளதால், இந்த மசோதாவை அவசர அவசரமாக தாக்கல் செய்ய மத்திய அரசு தீவிரம் காட்டி வந்தது. எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நாளைய லோக்சபா அலுவல் பட்டியலில் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதா அறிமுகம் செய்வது குறித்து எந்த தகவலும் இல்லை என மக்களவை செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.