தோடா (ஜம்மு-காஷ்மீர்): ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலை முன்னிட்டு தோடா நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர், “இந்த முறை ஜம்மு காஷ்மீர் தேர்தல் ஜம்மு காஷ்மீரின் தலைவிதியை தீர்மானிக்கப் போகிறது. சுதந்திரத்திற்குப் பிறகு, ஜம்மு-காஷ்மீர் தொடர்ந்து அந்நிய சக்திகளால் குறிவைக்கப்பட்டது.
அதன் பிறகு, குடும்ப அரசியல்வாதிகள் இந்த அழகான மாநிலத்தை குழிதோண்டிப் புதைக்கத் தொடங்கினர். நீங்கள் நம்பிய இந்த அரசியல் கட்சிகள் உங்கள் குழந்தைகளைப் பற்றி கவலைப்படுவதில்லை.
அந்த அரசியல் கட்சிகள் தங்களுடைய சொந்த குழந்தைகளை மட்டுமே உயர்த்திக்கொண்டன. ஜம்மு காஷ்மீர் இளைஞர்கள் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். குடும்ப அரசியலை ஊக்குவிக்கும் கட்சிகள் உங்களை தவறாக வழிநடத்தி வேடிக்கை பார்த்தன.
ஜம்மு காஷ்மீரின் எந்தப் பகுதியிலும் புதிய தலைவர்கள் உருவாக அவர்கள் அனுமதிக்கவில்லை. 2000-க்கு பிறகு இங்கு பஞ்சாயத்து தேர்தல் நடக்கவில்லை என்பதும் உங்களுக்கு தெரியும். இங்குள்ள குடும்ப அரசியல் கட்சிகள் ஜம்மு காஷ்மீர் இளைஞர்களை முன்னேற விடுவதில்லை.
அதனால்தான், 2014-ல் ஆட்சிக்கு வந்த பிறகு, ஜம்மு-காஷ்மீரில் புதிய இளைஞர் தலைமையைக் கொண்டுவர முயற்சித்தேன். பின்னர் 2018-ல் இங்கு பஞ்சாயத்து தேர்தல் நடந்தது.
2019-ல், BDC தேர்தல்கள் நடத்தப்பட்டன. 2020-ல், DDC தேர்தல்கள் முதல் முறையாக நடத்தப்பட்டன. எதற்காக இந்தத் தேர்தல்கள் நடத்தப்பட்டன? ஏனெனில், ஜம்மு-காஷ்மீரில் ஜனநாயகம் அடிமட்டத்தை அடைவதற்கு இந்தத் தேர்தல்கள்தான் காரணம்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் மூன்று குடும்பங்களுக்கும் ஜம்மு காஷ்மீர் இளைஞர்களுக்கும் இடையே நடக்கிறது. ஒரு குடும்பம் காங்கிரஸையும், ஒரு குடும்பம் தேசிய மாநாட்டுக் கட்சியையும், ஒரு குடும்பம் மக்கள் ஜனநாயகக் கட்சியையும் சேர்ந்தது.
இந்த மூன்று குடும்பங்களும் உங்களுக்கு எதிராக மட்டுமே பாவம் செய்தன. அவர்கள் உங்களுக்கு வேறு எதுவும் செய்ய மாட்டார்கள். ஜம்மு காஷ்மீரில் கடந்த காலங்களில் அறிவிக்கப்படாத ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது நினைவிருக்கலாம். மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசின் உள்துறை அமைச்சர் கூட லால் சவுக்கிற்கு செல்ல பயப்பட்டார்.
ஆனால் பயங்கரவாதம் இன்று இறுதி மூச்சு விடுகின்றது. ஜம்மு காஷ்மீரில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் நல்ல கல்வியைப் பெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன். கடந்த சில ஆண்டுகளாக ஜம்மு காஷ்மீரில் இளைஞர்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை பாஜக அரசு திறந்துள்ளது.
தோடாவில் மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை பாஜக அரசால் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது. இங்குள்ள இளைஞர்கள் சிறந்த கல்விக்காக நாட்டின் பிற மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஒரு காலத்தில் இருந்தது.
இன்று மருத்துவக் கல்லூரி, எய்ம்ஸ், ஐஐடி என எதுவாக இருந்தாலும், ஜம்மு காஷ்மீரில் இடங்கள் பன்மடங்கு அதிகரித்துள்ளன. தற்போது, பாஜகவின் ஜம்மு காஷ்மீர் பிரிவு பண்டிட் பிரேம்நாத் டோக்ரா வேலைவாய்ப்புத் திட்டத்தை அறிவித்துள்ளது.
இதன்படி, பாஜக ஆட்சிக்கு வந்தால் லட்சக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகள் மாநிலத்தில் உருவாக்கப்படும். இங்கு கல்லூரிக்கு செல்லும் இளைஞர்களுக்கு பயணப்படியும் வழங்கப்படும். சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கமாக இருக்கும் பயங்கரவாதம் இல்லாத ஜம்மு காஷ்மீரை பாஜக உருவாக்கப் போகிறது.
சுற்றுலாவை மேலும் விரிவுபடுத்தவும், நீங்கள் பயணம் செய்வதை எளிதாக்கவும் மத்திய பாஜக அரசு இங்கு போக்குவரத்து இணைப்பை பலப்படுத்தி வருகிறது. ஜம்மு காஷ்மீரின் தொலைதூரப் பகுதிகளை ரயில் மூலம் இணைக்கிறோம்.
ராம்பன் மாவட்டம், தோடா கிஷ்த்வார் மற்றும் காஷ்மீர் பள்ளத்தாக்கு மக்கள் ரயில் மூலம் நேரடியாக டெல்லியை அடையலாம், உங்கள் கனவை நாங்கள் நனவாக்குவோம்.
மிக விரைவில், டெல்லியில் இருந்து ரம்பன் வழியாக ஸ்ரீநகருக்கு ரயில் பாதை அமைக்கப்படும். ஏழைகளுக்கு சிறந்த கல்வி மற்றும் சிறந்த சிகிச்சை வழங்குவதே எங்கள் உறுதி.
ஜம்மு காஷ்மீரில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5 லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சைக்கான காப்பீட்டு வசதி உள்ளது. இது ரூ. 7 லட்சமாக உயர்த்துவதாக ஜம்மு காஷ்மீர் பாஜக உறுதியளித்துள்ளது.
குடும்பத்தின் மூத்த பெண்ணின் வங்கிக் கணக்கில் ஆண்டுதோறும் ரூ.18,000 டெபாசிட் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஜம்மு-காஷ்மீர் விவசாயிகள் பிரதமரின் சம்மன் நிதியின் கீழ் ரூ.6,000 பெறுகின்றனர். இப்போது ரூ.10,000 ஆக உயர்த்தப்படும் என்று பாஜக அறிவித்துள்ளது’’ என்றார்.