புதுடெல்லி: ரஷ்யா மற்றும் ஆஸ்திரியா பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி இன்று (ஜூலை 11) காலை நாடு திரும்பினார். டெல்லி வந்த அவரை அதிகாரிகள் மற்றும் மூத்த அமைச்சர்கள் வரவேற்றனர். தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு, பிரதமர் மோடி ரஷ்யா மற்றும் ஆஸ்திரியா நாடுகளுக்கு அரசுமுறை பயணமாக சென்றார்.
இரண்டு நாட்கள் ரஷ்யாவில் இருந்த அவர் அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்துப் பேசினார். பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே அமைதியை அடைய முடியும் என்று அவர் புதினிடம் கூறினார். அந்த பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி மத்திய ஐரோப்பிய நாடான ஆஸ்திரியா சென்றடைந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரதமர் மோடி ஆஸ்திரிய பிரதமர் கார்ல் நெஹ்மரை சந்தித்தார். பின்னர் ஆஸ்திரியாவில் வசிக்கும் இந்தியர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். இரு நாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு இன்று காலை டெல்லி வந்தடைந்தார்.