திருவனந்தபுரம்: காப்பீட்டு உரிமையை ரத்தத்தில் மது இருப்பதை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு நிராகரிக்க முடியாது எனக் கூறி, கேரள உயர் நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த வழக்கு, கேரள அரசின் நீர்பாசனத் துறையில் பணியாற்றிய கே.எஸ். ஷிபு என்பவரின் மரணத்தைச் சுற்றி தொடங்கியது. 2009ம் ஆண்டு அவர் பைக்கில் சென்றபோது சுற்றுலா பஸ்ஸுடன் மோதியதில் உயிரிழந்தார். அவருக்கு அரசு குழு காப்பீடு இருந்தது என்பதால், அவரது மனைவி ஏழு லட்சம் ரூபாய் காப்பீட்டு தொகையை கோரினார்.

அந்த கோரிக்கையை காப்பீடு நிறுவனம் நிராகரித்தது. காரணம் – ஷிபுவின் ரத்தத்தில் ஆல்கஹால் (மது) இருப்பது மருத்துவ அறிக்கையில் உறுதி செய்யப்பட்டதாக தெரிவித்தது. இதனை எதிர்த்து மனைவி குறைதீர்ப்பு அமைப்பை நாடினார். குறைதீர்ப்பு அமைப்பு, காப்பீட்டு தொகையை வழங்குமாறு உத்தரவிட்டது. இதை மீண்டும் எதிர்த்து காப்பீடு நிறுவனம் கேரள உயர் நீதிமன்றத்தில் முறையிட்டது.
நீண்ட விசாரணைக்கு பின், டிவிஷன் பெஞ்ச் முக்கிய தீர்ப்பை வழங்கியது. அதில், “ரத்தத்தில் ஆல்கஹால் இருந்தது என்பது மட்டும் போதாது. அது ஓட்டுநரின் சுய உணர்வை பாதித்து விபத்தை ஏற்படுத்திய அளவுக்கு இருந்தது என்பதை நிரூபிக்க வேண்டும். மது அருந்தியிருந்தாலும், அது விபத்துக்கான நேரடி காரணமாக இருந்தால் மட்டுமே காப்பீடு தொகையை மறுக்க முடியும்,” என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.
இந்த தீர்ப்பு, எதிர்காலத்தில் பல காப்பீட்டு வழக்குகளுக்கு முக்கிய வழிகாட்டுதலாக அமையும் என சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர். மக்கள் நலனுக்காக காப்பீடு நிறுவனங்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும், ஆதாரமற்ற காரணங்களால் உரிமைகளை மறுக்கக் கூடாது என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.