புதுடில்லி: டில்லி செங்கோட்டை வளாகத்தில் உள்ள 15வது கேட் அருகே அமைந்துள்ள பூங்காவில், சமண மத விழா 3ம் தேதி தொடங்கி 9ம் தேதி வரை நடைபெற்று வருகிறது. இவ்விழாவில், சடங்குகள் செய்ய தொழிலதிபர் சுதீர் ஜெயின், வைரம், மாணிக்கம் மற்றும் மரகதக் கற்கள் பதிக்கப்பட்ட 760 கிராம் எடையுடைய தங்கக் கலசத்தை கொண்டு வந்தார். இதன் மதிப்பு 1 கோடி ரூபாயாகும்.

ஆனால், விழா முடிவில் அந்த கலசம் மாயமானது. இதுகுறித்து போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, சமண மத துறவி வேடம் அணிந்த நபர் அந்த கலசத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. சந்தேக நபர் மீது ஏற்கனவே மூன்று திருட்டு வழக்குகள் உள்ளன என்றும் போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் டில்லி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத நிகழ்வில் இவ்வாறு நடைபெற்ற திருட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது. போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
கலசத்தை திருடிச் சென்ற நபர் விரைவில் கைது செய்யப்படுவார் என அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளனர். இந்தச் சம்பவம் சமண மத சமூகத்தையும், விழாவில் பங்கேற்ற பக்தர்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.