பாட்னா: தமிழ்நாட்டில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 40 பேர் இறந்த சம்பவம் குறித்து துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் வருத்தம் தெரிவித்துள்ளார். பீகார் தலைநகர் பாட்னாவில் நேற்று ‘உன்மேஷா சர்வதேச இலக்கிய விழா’வின் நிறைவு விழா நடைபெற்றது.
இதில், கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பிரச்சார பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் இறந்த 40 பேருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் பங்கேற்ற துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், “இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.

பல இளைஞர்கள் இறந்துள்ளனர். இது மிகவும் வருத்தமளிக்கிறது. அதிக மக்கள் கூடும் போது மக்கள் தங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதே எனது தாழ்மையான வேண்டுகோள்.
பெங்களூருவில் கிரிக்கெட் போட்டிக்குப் பிறகு நடைபெற்ற பாராட்டு விழாவிலும் இதேபோன்ற சம்பவம் நடந்தது. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் ஒருபோதும் நடக்கக்கூடாது என்று நான் நம்புகிறேன்.”