பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்) கணக்கில் வாரிசுகளைச் சேர்ப்பதற்கும், புதுப்பிப்பதற்கும் இனி கட்டணம் விதிக்கப்படாது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, ‘எக்ஸ்’ தளத்தில் நேற்று நிர்மலா சீதாராமன் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:-
பிபிஎஃப் கணக்கில் வாரிசுகளை சேர்ப்பதற்கும், அப்டேட் செய்வதற்கும் நிதி நிறுவனங்கள் கட்டணம் வசூலிப்பதாக எனக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அரசு சேமிப்பு ஊக்குவிப்பு பொது விதிகள், 2018-ல் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டு, ஏப்., 2-ல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதன் மூலம், கட்டணம் வசூலிக்க அனுமதிக்கும் பிரிவு நீக்கப்பட்டுள்ளது. இது ஏப்ரல் 2-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. சமீபத்தில், வங்கி திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்ட பணம் மற்றும் லாக்கர்களில் வைக்கப்பட்டுள்ள மதிப்புமிக்க பொருட்களுக்கு 4 பேர் வரை வாரிசுகளாக சேர்க்க முடியும். இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.