மும்பை: ஃபட்னாவிஸ் அரசு மராத்தி மற்றும் ஆங்கில வழிப் பள்ளிகளில் இந்தியைக் கட்டாயம் மூன்றாம் மொழியாக்கும் திட்டத்தை அறிவித்தது. இந்த விதி 2025-26-ம் கல்வியாண்டு முதல் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குப் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மராத்தியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை மூன்றாம் மொழியாக ஹிந்தியை கட்டாயமாக்குவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
மொழிக்குழு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மகாராஷ்டிரா கல்வி ஆராய்ச்சி கவுன்சிலும் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது. மும்மொழிக் கொள்கை அறிவியல்பூர்வமானது அல்ல. 12-ம் வகுப்பு வரை இருமொழிக் கொள்கை பின்பற்ற வேண்டும். மூன்றாம் மொழி கற்பது மாணவர்களுக்கு சுமையாக இருக்கும். ஒரு மொழியைக் கூட சரியாகக் கற்க முடியாத நிலை ஏற்படும் என ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் இந்தி திணிப்பு குறித்த ஊகங்களுக்கு விளக்கம் அளித்தார். மராத்தியைத் தவிர வேறு எந்த மொழியும் கட்டாயமில்லை. மற்ற மொழிகளைக் கற்பிக்க போதிய ஆசிரியர்கள் இல்லாததால், ஒரு வகுப்பில் குறைந்தபட்சம் 20 மாணவர்கள் விரும்பினால் மட்டுமே இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகள் மூன்றாம் மொழியாகக் கற்பிக்கப்படும்” என்றார்.
மகாராஷ்டிராவில் 1-5 வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாம் மொழியாக இந்தி கட்டாயம் இல்லை என்று அம்மாநில முதல்வர் ஃபட்னாவிஸ் அளித்த விளக்கத்தால் குழப்பம் ஏற்பட்டது.