புதுடெல்லி: சிறுசேமிப்பு வட்டி விகிதம் இந்த ஆண்டு மார்ச் வரை எந்த மாற்றமும் இல்லாமல் தொடரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஜனவரி 1, 2025 தொடங்கி மார்ச் 31, 2025 வரையிலான காலாண்டிற்கான பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின் மூலம், சுகன்யா சம்ரித்தி யோஜனாவின் கீழ் வைப்புத்தொகைக்கு 8.2 சதவீத வட்டி கிடைக்கும். அதே சமயம், நடப்பு காலாண்டில் மூன்றாண்டு டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் 7.1 சதவீதமாகவே உள்ளது. பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்) 7.1 சதவீதமாகவும், அஞ்சலக சேமிப்பு வைப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் 4 சதவீதமாகவும், கிசான் விகாஸ் பத்திராவின் வட்டி விகிதம் 7.5 சதவீதமாகவும் இருக்கும்.
இது தொடர்பான முதலீடுகள் 115 மாதங்களில் முதிர்ச்சியடையும். தேசிய சேமிப்புச் சான்றிதழின் (என்எஸ்சி) வட்டி விகிதம் ஜனவரி-மார்ச் 2025 காலகட்டத்தில் 7.7 சதவீதமாக இருக்கும். நடப்பு காலாண்டைப் போலவே, மாத வருமானத் திட்டமும் முதலீட்டாளர்களுக்கு 7.4 சதவீதத்தை அளிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், கடந்த நான்கு காலாண்டுகளாக வட்டி விகிதங்கள் மாறாமல் உள்ளது.