டெல்லி: மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் வி.சி.க.தலைவர் திருமாவளவன் எம்.பி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேலும் கூறியதாவது:- மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு இந்த அவையின் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன்.
பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவது வழக்கம். 2021-ல் நடத்தப்பட வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு கொரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. ஆனால், இந்திய மத்திய அரசு அதற்கான முனைப்பு காட்டாமல் அமைதி காத்து வருவது அதிர்ச்சி அளிக்கிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பு இல்லாமல் வளர்ச்சித் திட்டங்களோ, நலிந்த பிரிவினருக்கான நலத்திட்டங்களோ செயல்படுத்த முடியாது என்பது இந்த அரசுக்கு நன்றாகவே தெரியும்.

அதுமட்டுமல்லாமல், நாடாளுமன்றத் தொகுதி எல்லை நிர்ணயம் செய்யப்பட வேண்டுமானால் மக்கள் தொகை கணக்கெடுப்பு மிகவும் முக்கியமானது. அதேபோல், பெண்களுக்கான இடஒதுக்கீடு திட்டம் அமல்படுத்தப்பட வேண்டுமானால், மக்கள் தொகை கணக்கெடுப்பு மிகவும் முக்கியமானது. எனவே, மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் ஜாதிவாரி கணக்கெடுப்பும் இடம்பெற வேண்டும்,” என்றார்.