உத்தரப் பிரதேசத்தின் ஷாஜஹான்பூர் மாவட்டத்தில், மத மாற்ற விவகாரம் தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்தவருடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹிந்துக்களை கிறிஸ்துவ மதத்திற்கு மாற்றும் செயல்களில் ஈடுபட்டதாக கிரண் ஜோசுவா என்ற பெண்ணை போலீசார் முதலில் கைது செய்தனர்.
விசாரணையில், நிதி நெருக்கடி மற்றும் குடும்பத்திலுள்ள பிரச்சனைகளைச் சந்திக்கும் மக்களை இலக்காகக் கொண்டு, ஜோசுவா அவர்களிடம் பிரார்த்தனை செய்ய அழைத்து, அதன்பிறகு அவர்களது மனதை மாற்ற முயன்றுள்ளதாக தெரியவந்தது. இதைத் தொடர்ந்து மதமாற்ற நடவடிக்கைக்காக அவருக்கு நிதியுதவி கிடைத்தது உறுதி செய்யப்பட்டது.

அதன்பின், ஜோசுவா அளித்த தகவலின் அடிப்படையில், தமிழகத்தைச் சேர்ந்த பத்மநாபன், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த கிரண் மற்றும் அஷ்னீத் குமார் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு தமிழகம் மற்றும் மகாராஷ்டிராவை மையமாகக் கொண்டு இயங்கும் சில அறக்கட்டளைகள் நிதியுதவி அளித்துள்ளதும், சில வெளிநாடுகளிலிருந்தும் நிதி பெற்றுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.
இந்த விவகாரத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மத மாற்றத்தை ஊக்குவிக்கும் அமைப்புகள் மற்றும் நிதி வளங்களை அடையாளம் காணும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இது போன்ற சம்பவங்கள் சமூகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன.