சென்னை: திருப்பதி லட்டு விவகாரம் இந்துக்களின் இதயங்களில் மிகுந்த வேதனையையும் காயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதிலிருந்து விடுபட்டு மன அமைதி பெற பிராணாயாமம் போன்ற பயிற்சிகளை செய்ய வேண்டும் என வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருப்பதி லட்டு தயாரிக்கும் நெய்யில் கலப்படம் இருந்ததை அறிந்து மக்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். இதிலிருந்து அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு மன அமைதி தேவை. பிராணாயாமம் (சுவாசப் பயிற்சிகள்) தினமும் காலையில் 5 அல்லது 10 நிமிடங்கள் தவறாமல் செய்ய வேண்டும்.
மூச்சை உள்ளிழுப்பதும் வெளிவிடுவதும் மனதை அமைதிப்படுத்தும். ஒரு கிண்ணத்தில் தண்ணீரை வைத்து, அதை உங்கள் வலது கையால் மூடி, ‘ஓம் அப புனந்து பிருந்துவீம்’ என்று தொடங்கும் பிராசன மந்திரத்தை உச்சரித்து, தண்ணீரைக் குடிக்கவும்.
இந்த நீரால் அனைவரும் சுத்திகரிக்கப்பட வேண்டும் என்று பிரார்த்தனை செய்ய வேண்டும். அதன் பிறகு, தேவைப்பட்டால், ‘பவமான சூக்தம்’ என்ற மந்திரத்தின் மூலம் மனதை அமைதிப்படுத்தலாம். அன்பினால் சகலமும் பரிசுத்தமாக்கப்படட்டும்.
இந்த வேதனையிலிருந்து மக்கள் அனைவரும் வெளிவர எல்லாம் வல்ல இறைவன் உதவட்டும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.