திருமலை: ஆந்திராவில் ‘மனமித்ரா’ என்ற பெயரில் வாட்ஸ்அப் மூலம் பல்வேறு சேவைகளை வழங்கும் திட்டத்தை முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திர அரசு துவக்கியுள்ளது. இந்த திட்டத்தை விரிவுபடுத்தி பல்வேறு சேவைகளை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி தற்போது திருப்பதி ஏழுமலையான் கோயில் தரிசன டிக்கெட் முன்பதிவு சேவைகள் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் தொடர்பான சேவைகள் விரைவில் வாட்ஸ்அப்பில் கிடைக்கும் என அரசு தெரிவித்துள்ளது.
இதன் மூலம் பக்தர்கள் தரிசன டிக்கெட் மற்றும் அறைகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். சேவைகளுக்கு நன்கொடை வழங்கலாம். தற்போது, துர்கா மல்லேஸ்வர சுவாமி கோவில் சேவைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த சேவைகளை பெற, 95523 00009 என்ற அரசு வாட்ஸ்அப் எண்ணுக்கு ‘ஹாய்’ என குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும். கோவில் முன்பதிவு சேவைகள், தரிசனங்கள், பூஜைகள், நன்கொடைகள் மற்றும் பிற சேவைகள் பற்றிய தகவல்களை சாட்போட் மூலம் வழங்குகிறது.
வழிமுறைகளைப் பின்பற்றி, விருப்பங்களைத் தேர்ந்தெடுத்து விவரங்களை வழங்கிய பிறகு, டிஜிட்டல் பணப்பரிமாற்ற ‘கேட்வே’ உடனடியாக தோன்றும். பணம் செலுத்தியதும், டிக்கெட் செலுத்துபவரின் வாட்ஸ்அப் எண்ணுக்கு ஒரு செய்தி அனுப்பப்படும். இதன் மூலம் முன்பதிவு விவரங்களைப் பெறலாம். பக்தர்கள் இந்த டிக்கெட்டை ‘டவுன்லோடு’ செய்து, பிரிண்ட் அவுட் எடுத்து அந்தந்த கோவில்களுக்கு செல்லலாம்.