ஆந்திர மாநிலத்தில் கடந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைமையிலான ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியின் போது, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்ட லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு கலந்திருப்பதாக தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.
இக்குற்றச்சாட்டு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அம்மாநில சிறப்பு புலனாய்வு குழு தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், திருப்பதி கோவிலுக்கு செல்ல இருந்த முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, திடீரென பயணத்தை ரத்து செய்தார்.
இந்தப் பயணத்தை தெலுங்கு தேசம் கட்சி தடுப்பதாகக் கூறி பயணத்தை ரத்து செய்தார். முன்னதாக, ஆந்திராவில் உள்ள அனைத்து இந்து கோவில்களிலும் இந்துக்களுக்கு மட்டுமே பதவி வழங்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வர உள்ளதாக அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சந்திரபாபு, “திருப்பதி தேவஸ்தானம் தனித்துவமான கொள்கை மற்றும் கலாச்சாரத்தைக் கொண்டுள்ளது. மத வேறுபாடின்றி அனைவரும் மதிக்க வேண்டும்,” என்றார்.
மேலும் அவர் கூறுகையில், ஜெகன்மோகன் ரெட்டியை கோவிலுக்கு செல்ல வேண்டாம் என்று யாரும் கூறவில்லை. சமீபகால சர்ச்சைகளால், இந்து மத உணர்வுகள் புண்படுத்தப்பட்டு, பக்தர்கள் போராட்டம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
”திருப்பதிக்கு ஜெகன் வந்தால், தாங்களும் அணிதிரள்வோம் என, இந்த குழுக்கள் கூறியுள்ளன. “கடந்த காலங்களில் ஜெகன் மோகன் ரெட்டி திருப்பதியின் விதிமுறைகளை மீறினார்” என்றும், “அவர் தொடர்வது நியாயமில்லை” என்றும் கூறினார்.
ஜெகன்மோகன் ரெட்டி தனது வீட்டில் பைபிளைப் படிப்பேன், மற்ற மதங்களை மதிப்பேன் என்று கூறியதற்கு எதிராக, மத மரபுகளை மதித்து, திருப்பதி தேவஸ்தான விதிமுறைகளைப் பின்பற்றுவது அவசியம் என்றார்.
“ஒரு இந்துவாக நான் பூஜை செய்கிறேன். “நான் சர்ச், மசூதிக்கு செல்லும்போது, அவர்களின் பாரம்பரியத்தை மதிக்கிறேன்” என்று கூறிய சந்திரபாபு, “மத நல்லிணக்கம் பேணப்பட வேண்டும்” என்றார்.
“அவர் அறிக்கையை சமர்பிப்பதில் ஆர்வம் காட்டவில்லை. இதனால்தான் பாலாஜியை வழிபட திருப்பதிக்கு செல்வதை தவிர்த்து வருகிறார்,” என்றார். தேவாலயங்கள் மற்றும் மசூதிகள் அந்தந்த தலைவர்களால் வழிநடத்தப்படுவது போல், இந்து தலைவர்கள் கோவில்களை வழிநடத்த வேண்டும், என்றார்.