ஜி7 உச்சிமாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்ட போது, அவர் பல நாட்டு தலைவர்களுக்கு பாரம்பரிய இந்திய கலைப்பொருட்களை பரிசாக வழங்கினார். இந்த மாநாடு கனடாவில் நடைபெற்றது. அதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பிரதமர் மோடி, ஒவ்வொரு நாட்டின் பிரதிநிதியருக்கும் தனித்தன்மையுடன் இந்தியாவின் கலாசாரத்தைக் பிரதிபலிக்கும் பரிசுகளை வழங்கியுள்ளார்.

கனடா பிரதமருக்கு பித்தளையில் செய்யப்பட்ட போதி மர சிலை மற்றும் ஆளுநருக்கு வெள்ளிப் பர்ஸ் வழங்கப்பட்டன. அல்பர்டா மாகாணத் தலைவருக்கு ராஜஸ்தான் மரக்கலையையும், துணைநிலை ஆளுநருக்கு தங்க இழையால் ஆன பெட்டியையும் பரிசாக அளித்தார். பிரான்ஸ் அதிபர் மேக்ரோனுக்கு தமிழ்நாட்டில் செய்யப்பட்ட நந்தி சிலை வழங்கப்பட்டது. ஜெர்மன் பிரதமருக்கு கோனார்க் கோயிலின் சிற்ப மாதிரி பரிசாக அளிக்கப்பட்டது.
ஆஸ்திரேலிய பிரதமருக்கு மகாராஷ்டிராவில் செய்யப்பட்ட வெள்ளிக் குடுவையும், பிரேசில் அதிபருக்கு மூங்கிலால் செய்யப்பட்ட கப்பல் வடிவக் கலைப்பொருளும் வழங்கப்பட்டது. தென்ஆப்ரிக்கா அதிபருக்கு சத்தீஸ்கர் கைவினைஞர்கள் உருவாக்கிய பித்தளை குதிரை சிலை, தென்கொரிய அதிபருக்கு மதுபானி ஓவியம், மெக்சிகோ அதிபருக்கு வார்லி ஓவியங்கள் பரிசாக அளிக்கப்பட்டன.
இந்த பரிசுகள் ஒவ்வொன்றும் இந்திய கலாச்சாரம், கைவினை, மற்றும் பாரம்பரியத்தின் சிறப்பை வெளிப்படுத்துகின்றன. இது உலக நாடுகளிடம் இந்திய கலையின் பெருமையை எடுத்துச் சொல்லும் ஒரு அரிய வாய்ப்பாகும் என அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.