மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ரயில்வே பயணிகள் தொடர்ச்சியாக எதிர்கொள்ளும் சிக்கலை கவனத்தில் கொண்டு முக்கியமான உத்தரவை பிறப்பித்துள்ளார். புதிய உத்தரவின் படி, இனி ரயில் புறப்படுவதற்குமுன் எட்டுமணி நேரத்திற்கு முன்பே பயணிகளுக்கான இறுதி முன்பதிவு அட்டவணை தயாரிக்கப்பட வேண்டும். இதற்காக ரயில்வே வாரியத்திடமிருந்து பரிந்துரை கிடைத்ததை ஏற்று, மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

தற்போது நடைமுறையில் உள்ள அமைப்பில், ரயிலில் பயணம் செய்வதற்காக இரண்டு மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்யும் வசதி வழங்கப்படுகிறது. ஆனால் பயணிக்க நான்கு மணி நேரத்திற்கு முன்புதான் இறுதி பயணிகள் பட்டியல் வெளியிடப்படுகிறது. இது, காத்திருப்புப் பட்டியலில் உள்ள பயணிகள் பயண நேரத்துக்கு குறுகிய நேரத்தில் தங்களுக்குத் தரமான தகவல் கிடைக்காமல், இடம் கிடைக்காமல் தவிக்கச் செய்யும் பிரச்சனையை உருவாக்குகிறது.
இந்த நிலைமையை சரிசெய்யும் நோக்கத்தில், ரயில்வே அமைச்சகம் நடைமுறை மாற்றங்களை மேற்கொள்ள தொடங்கியுள்ளது. பகல் 2 மணிக்கு முன்பாக புறப்படும் ரயில்களுக்கான இறுதி பயணிகள் பட்டியல் முந்தைய தின இரவு 9 மணிக்கே வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை, நாளையே அமலுக்கு வரக்கூடும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் பயணிகள் விரைவில் தங்களது இடத்தைக் கணிக்க முடியும் வாய்ப்பு உருவாகும்.
இதற்கிடையில், ஐஆர்சிடிசி இணையதளத்தில் தற்போது ஒரு மணி நேரத்திற்கு அதிகபட்சம் 32,000 டிக்கெட்டுகள் மட்டுமே முன்பதிவு செய்ய முடிகிறது. இவ்விலக்கை எதிர்காலத்தில் 1.5 லட்சம் டிக்கெட்டுகளாக உயர்த்தும் திட்டத்தையும் ரயில்வே எடுத்துள்ளது. இது மூலம் பயணிகள் எண்ணிக்கையை மேம்படுத்தி, அதிக அளவில் முன்பதிவு வசதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.