புதுடெல்லி: அமெரிக்க அதிபர்கள் யாருமே செய்யாத செயல் என்று தனக்காக ட்ரம்ப் செய்த செயல் குறித்து பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியை பேட்டி எடுத்த அமெரிக்க கம்ப்யூட்டர் விஞ்ஞானியும், எழுத்தாளருமான லெக்ஸ் பிரிட்மேன், அந்த வீடியோவை சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்த இன்டர்வ்யூவில், டிரம்ப்பை நண்பராகவும், ஒரு தலைவராகவும் எப்படி பார்க்கிறீர்கள்? என்று பிரிட்மேன் பிரதமரிடம் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பேசிய பிரதமர் மோடி, 2019ல் அமெரிக்காவில் நடந்த ஹவுடி மோடி நிகழ்ச்சியை சுட்டிக்காட்டி சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது: கடந்த 2019ல் ஹூஸ்டனில் ‘ஹவுடி மோடி’ நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், மக்கள் கூட்டம் அலைமோதியது. நான் உரையாற்றி கொண்டிருக்கும் போது, அதிபர் டிரம்ப் பார்வையாளர்களுடன் அமர்ந்திருந்தார். இது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.
எனது உரையை முடித்த பிறகு, மேடையில் இருந்து கீழே இறங்கி வந்தேன். அப்போது, என்னுடன் சேர்ந்து அரங்கை வலம் வருமாறு டிரம்ப்பிடம் கோரிக்கை விடுத்தேன். அமெரிக்கர்களின் வாழ்க்கையை பொறுத்தவரையில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருக்கும் இடத்தில் அதிபர் ஒருவர் பாதுகாப்பின்றி நடந்து வருவது என்பது சாதாரண விஷயம் கிடையாது.
இது அவரது சொந்த முடிவாகும். என் மீதும், அந்த நிகழ்ச்சியில் என்னுடைய தலைமையின் மீதும் வைத்த நம்பிக்கையின் பேரில், மக்கள் கூட்டத்திற்கு மத்தியில், எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் என்னுடன் நடைபோட்டார். எங்களுக்கு இடையிலான வலுவான உறவு மற்றும் பரஸ்பரமான நம்பிக்கைக்கு இது சான்றாகும். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.