அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், H-1B விசா கட்டணத்தை வருடத்திற்கு 1,00,000 டாலர் (சுமார் ரூ.88 லட்சம்) உயர்த்துவதாக அறிவித்துள்ளார். இந்த விசா பெரும்பாலும் இந்திய தொழில்நுட்ப வல்லுநர்களால் பயன்படுத்தப்படுவதால், இந்தியர்களுக்கு இது பெரும் சவாலாக மாறியுள்ளது. ஆண்டுதோறும் 85,000 H-1B விசாக்கள் வழங்கப்படுகின்றன. இதில் இந்தியர்களின் பங்கு மூன்றில் இரண்டு பங்கு எனும் நிலையில், இந்த உயர்வு தொழில்நுட்ப துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அறிவிப்புக்குப் பிறகு, பிரதமர் நரேந்திர மோடி தனது கருத்தை வெளியிட்டார். இந்தியாவின் பெரிய எதிரி வேறு நாடுகளின் மீது உள்ள நமது சார்பான அமைப்பு தான் என அவர் வலியுறுத்தினார். ‘ஆத்மநிர்பர’ இந்தியா மட்டுமே இந்த சவால்களை எதிர்கொண்டு முன்னேற முடியும் என்று கூறிய அவர், இந்தியாவின் திறன்களை வெளிப்படுத்த வேண்டிய நேரம் இது என தெரிவித்தார்.
மோடி, சுதந்திரத்திற்குப் பிறகு காங்கிரஸ் அரசு நாட்டை ‘லைசன்ஸ்–கோட்டா’ முறையில் கட்டுப்படுத்தியதும், பின்னர் இறக்குமதி சார்ந்த வளர்ச்சி மட்டுமே ஏற்பட்டதும், நாட்டின் முன்னேற்றத்தை தாமதப்படுத்தியதாக குற்றம்சாட்டினார். இந்தியா இப்போது தன்னம்பிக்கையுடன் உலகின் முன் நிற்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அமெரிக்கா இந்த கட்டண உயர்வை, அந்நாட்டு உள்ளூர் ஊழியர்களின் சம்பளத்தை குறைக்காமல் பாதுகாக்கும் முயற்சியாக விளக்கினாலும், இந்திய வல்லுநர்களுக்கும் பெரும் நிறுவனங்களுக்கும் இது சிரமத்தை ஏற்படுத்தும். இந்தச் சூழலில், மோடி வலியுறுத்திய சுயாதீன வளர்ச்சி, இந்தியாவின் எதிர்காலத்திற்கு முக்கியமான பாதையாக பார்க்கப்படுகிறது.