புதுடெல்லி: ஜம்மு காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என முதல்வர் உமர் அப்துல்லாவிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார். ஆகஸ்ட் 5, 2019 அன்று, ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. பின்னர் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டன.
இந்நிலையில், சமீபத்தில் நடந்த ஜம்மு காஷ்மீர் சட்டப் பேரவைத் தேர்தலில் தேசிய மாநாட்டு – காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. காஷ்மீரின் புதிய முதல்வராக தேசிய மாநாட்டுக் கட்சி துணைத் தலைவர் உமர் அப்துல்லா கடந்த 16-ம் தேதி பதவியேற்றார். மறுநாள் அமைச்சரவைக் கூட்டத்தில் ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானம் லெப்டினன்ட் கவர்னர் மூலம் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து, ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேற்று டெல்லியில் சந்தித்து பேசினார். ஜம்மு-காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என அமைச்சர் அமித்ஷா உறுதியளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை நேற்று அப்துல்லாடெல்லியில் முதல்வர் சந்தித்தார். அப்போது அவருக்கு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரி தீர்மானம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து, தேசிய மாநாட்டு கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:-
ஜம்மு – காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கிடைத்த பின், சட்டம் இயற்றும் அதிகாரம், மாநில அரசுக்கு கிடைக்கும். ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை மாநில அரசு நியமித்து இடமாற்றம் செய்யலாம். சட்டப் பேரவையில் நிதி மசோதா நிறைவேற்றப்பட்டால், துணைநிலை ஆளுநரின் ஒப்புதல் தேவைப்படாது. யூனியன் பிரதேசமாக இருப்பதால், 10 சதவீத எம்.எல்.ஏ.,க்களை மட்டுமே அமைச்சர்களாக நியமிக்க முடியும்.
மாநில அந்தஸ்து கிடைத்தவுடன் 15 சதவீதம் பேர் அமைச்சர்களாக நியமிக்கப்படலாம். ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதே நேரத்தில் முதல்வர் உமர் அப்துல்லா மத்திய அரசை நேரடியாக வலியுறுத்தியுள்ளார். இவ்வாறு தேசிய மாநாட்டு கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.