“தேசிய கல்விக் கொள்கை (NEP) விவகாரத்தில் தமிழகத்தில் சிலர் அரசியல் செய்கிறார்கள். ஆனால், இந்தக் கொள்கையை செயல்படுத்துவதில் மோடி அரசு உறுதியாக உள்ளது” என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், தர்மேந்திர பிரதான் கூறியதாவது: “கல்வி பொதுப் பட்டியலில் உள்ளது. மாணவர்களுக்கு போட்டியை உருவாக்கவும், சமமான நிலையை ஏற்படுத்தவும், தேசிய கல்விக் கொள்கை ஒரு பொதுத் தளமாக அமைகிறது. இந்தக் கொள்கை தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. தமிழர் நாகரிகம், கலாச்சாரம் மற்றும் மொழியை ஊக்குவிக்க நாம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.
தமிழ்நாட்டில் சிலர், பன்மொழிக் கல்வி முறையை எதிர்க்கிறார்கள். ஆனால், தமிழ், ஆங்கிலம் மற்றும் ஏதாவது ஒரு இந்திய மொழி கற்றுக்கொள்வதில் எந்த தவறும் இல்லை. மத்திய அரசு எந்த ஒரு மொழியையும் திணிக்கவில்லை. சிலர் இதை அரசியல் நோக்கில் மாற்றி கூறுகிறார்கள். தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்த மத்திய அரசு உறுதியாக உள்ளது” என்று அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக, தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “மத்திய அரசு இந்தியை (ஹிந்தி) திணிக்க முயல்கிறது. தமிழக அரசு இதை ஏற்காது” என கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி. ராஜா, “NEP பெயரில் மத்திய அரசு ஒரு குறிப்பிட்ட மொழியை திணிக்க முயல்கிறது. நம் நாட்டில் பல மொழிகள் உள்ளன. அனைத்து மொழிகளும் தேசிய மொழிகளாகவே பார்க்கப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, “NEP-யை ஏற்க மறுப்பதால், தமிழகத்துக்கு கல்வித் திட்ட நிதியை வழங்க முடியாது” என்று தர்மேந்திர பிரதான் தெரிவித்திருந்தார். இதற்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்.