சண்டிகர்: பஞ்சாப்பில் முக்கிய அரசியல்வாதிகளை மற்றும் தன்னை கொலை செய்ய காலிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய அமைச்சர் ரவ்நீத் சிங் பிட்டு தெரிவித்துள்ளார்.
2023ம் ஆண்டு, தேசவிரோத செயல்களில் ஈடுபட்டதாக ‘வாரிஸ் பஞ்சாப் தே’ என்ற சீக்கிய தன்னார்வ குழுவின் தலைவர் அம்ரித்பால் சிங் கைது செய்யப்பட்டார். கதூர் சாஹிப் தொகுதியைச் சேர்ந்த இவர் தற்போது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரது காவல் அம்ஆத்மி அரசால் மேலும் ஒரு வருடம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதனால் கடும் எதிர்ப்பில் உள்ள அம்ரித்பால் சிங்கின் ஆதரவாளர்கள் வாட்ஸ்அப்பில் பரப்பியதாக கூறப்படும் சில மெசேஜ்களின் ஸ்கிரீன்ஷாட்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி உள்ளன. அந்தப் பதிவுகளில் மத்திய அமைச்சர் அமித் ஷா மற்றும் ரவ்நீத் சிங் பிட்டுவை இலக்காக்கி தாக்குதல் நடத்த சதி தீட்டப்பட்ட தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்த செய்திகளைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் ரவ்நீத் சிங் பிட்டு, இது குறித்து மத்திய அரசு மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். மேலும், ‘வாரிஸ் பஞ்சாப் தே’ எனும் அமைப்பு தன்னை கொல்ல திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது, “என்னுடைய தாத்தா பஞ்சாப்பில் அமைதிக்காக உயிர்தியாகம் செய்தவர். நானும் அந்த தியாகிகளின் குடும்பத்தில்தான் பிறந்தவன். இந்த அச்சுறுத்தல்களுக்கு பயப்படமாட்டேன். பஞ்சாப்பை மீண்டும் இருளில் இழுக்கும் முயற்சிகளை அனுமதிக்கவே மாட்டேன்” என்று உறுதியாக தெரிவித்துள்ளார்.