சென்னை துறைமுகம் சார்பில், ‘பெண்களின் சக்தியை நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்துவோம்’ என்ற நிகழ்ச்சி மற்றும் பாராலிம்பிக் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா மற்றும் தூய்மை இயக்க துவக்க விழா நேற்று சென்னையில் நடந்தது.
இதில், சென்னை மற்றும் காமராஜர் துறைமுகங்களின் தலைவர் சுனில் பாலிவால் வரவேற்று பேசினார். அப்போது அவர் பேசுகையில், ‘இன்று அனைத்து துறைகளின் வளர்ச்சியிலும் பெண்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
இதன் மூலம் 2047-ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறும். பெண்கள் குறிப்பாக தாய்மார்கள் இந்திய கலாச்சாரத்தில் கொண்டாடப்படுகிறார்கள்.
ஒவ்வொருவரும் தங்கள் தாய்மார்களை போற்றும் வகையில் மரம் நட வேண்டும்’ என்றார். மத்திய துறைமுகம், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித் துறை செயலர் டி.கே.ராமச்சந்திரன் கூறுகையில், ‘இன்று நாட்டின் முக்கிய துறைகளில் பெண்களின் பங்களிப்பு உள்ளது.
குறிப்பாக, பெண்கள் கப்பல்களில் மாலுமிகளாக பணிபுரிகின்றனர். நமது கலாச்சாரம் பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது’, என்றார். இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மத்திய துறைமுகம், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித்துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் பேசியதாவது:-
சென்னை துறைமுகத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒருவருடைய வாழ்க்கை தூய்மையாக இருந்தால், சமூகம் தூய்மையாகிறது. நாட்டை தூய்மையாக வைத்திருக்க அனைவரும் பங்களிக்க வேண்டும்.
பிரதமர் மோடியின் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் பெண்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. நாட்டின் வளர்ச்சிக்கு பெண்களின் பங்கு முக்கியமானது.
சர்வதேச அளவில் இந்தியாவின் பெருமையும் வலிமையும் அதிகரித்து வருகிறது. அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சியை எட்டும். இவ்வாறு பேசினார்.
இந்நிகழ்ச்சியில், பாரிசில் அண்மையில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற துளசிமதி முருகேசனுக்கு ரூ.2 லட்சமும், வெண்கலப் பதக்கம் வென்ற மனிஷா ராமதாஸுக்கு ரூ.1 லட்சமும் ரொக்கப் பரிசை அமைச்சர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் காமராஜர் துறைமுக நிர்வாக இயக்குநர் ஐரீன் சிந்தியா, சென்னை துறைமுக துணைத் தலைவர் எஸ்.விஸ்வநாதன், இந்திய கடல்சார் பல்கலைக்கழக துணைவேந்தர் மாலினி வி.சங்கர், நாட்டின் முதல் கடல் பொறியாளர் சோனாலி பானர்ஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.