நியூயார்க்: இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக தொழிலதிபர் கவுதம் அதானி மீதான 3 கிரிமினல் மற்றும் சிவில் வழக்குகளை ஒருங்கிணைத்து நியூயார்க் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2020-24 காலகட்டத்தில் சூரிய சக்தி விநியோக ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக இந்திய அதிகாரிகளுக்கு ரூ.2,100 கோடி லஞ்சம் கொடுத்ததாகவும், அமெரிக்க நிறுவனங்களிடமிருந்து முதலீடுகளைப் பெற்று இதை மறைத்ததாகவும் நியூயார்க்கில் உள்ள புரூக்ளின் ஃபெடரல் நீதிமன்றத்தில் அதானி குழுமம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் கவுதம் அதானி மற்றும் அவரது உறவினர் சாகர் அதானி (அதானி கிரீன் எனர்ஜியின் செயல் இயக்குநர்) மற்றும் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி வினீத் ஜெயின் உட்பட 7 பேர் மீது குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மற்றும் அவரது உறவினர்களுக்கு எதிராக கிரிமினல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டின் செக்யூரிட்டிகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் இரண்டு சிவில் வழக்குகளைத் தொடர்ந்துள்ளது.
அதன்படி, நிலுவையில் உள்ள அதானி மீதான கிரிமினல் வழக்கு, அதானி மீதான சிவில் வழக்கு, மற்ற குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான சிவில் வழக்கு என மூன்று வழக்குகளையும் ஒருங்கிணைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து நியூயார்க் நீதிமன்றம் கூறியது:- நீதித்துறையின் செயல்திறனை மேம்படுத்தும் வகையில், ஒவ்வொரு வழக்குகளும் வெவ்வேறு நேரங்களில் விசாரிக்கப்படும்.
மோதல்களை தவிர்க்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் மாவட்ட நீதிபதி நிக்கோலஸ் ஜி. கராஃபிஸிடம் ஒப்படைக்கப்படும். இவர் ஏற்கனவே அதானி மீதான குற்ற வழக்குகளை விசாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அதானி குழுமம், “அதானி கிரீன் நிறுவனத்தின் இயக்குநர்கள் மீது அமெரிக்க நீதித்துறை மற்றும் அமெரிக்க பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. இந்தக் குற்றச்சாட்டுகளை நாங்கள் மறுக்கிறோம். அமெரிக்க நீதித்துறையே, ‘குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றம் நிரூபிக்கப்படும் வரை நிரபராதிகள் எனக் கருதப்படுவார்கள்’ என்று கூறியுள்ளது.